இலங்கைக்கு 1 டன் சுக்கு கடத்த முயன்ற வாலிபர் கைது
மண்டபம் அருகே வேதாளை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு 1,100 கிலோ சுக்கு கடத்த முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பனைக்குளம்,
மண்டபம் அருகே வேதாளை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு 1,100 கிலோ சுக்கு கடத்த முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ரகசிய தகவல்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள வேதாளை கடற்கரை பகுதியில் இருந்து சில பொருட்கள் இலங்கைக்கு கடத்த உள்ளதாக தீவிர குற்ற தடுப்புபிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தீவிர குற்றத்தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நவநீதன் உள்ளிட்ட தனிப் பிரிவு போலீசாரும் இணைந்து வேதாளை கடற்கரை பகுதிக்கு விரைந்து சென்றனர்.
அப்போது அங்கு படகில் ஏற்றுவதற்காக கடற்கரையில் போடப்பட்டு இருந்த சுமார் 20 சாக்கு மூடைகளை பிரித்து சோதனை செய்தனர். அதில் சுக்கு இருப்பது தெரியவந்தது. 20 சாக்கு மூட்டைகளில் இருந்த 1,100 கிலோ சுக்கை பறிமுதல் செய்த போலீசார் மண்டபம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
இதுகுறித்து கடற்கரையில் நின்று கொண்டிருந்த ராமநாத புரம் தங்கப்பா நகரை சேர்ந்த ராஜாமுகமது (வயது 35) என்பவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய வேதாளையை சேர்ந்த மர்சுக்அலி என்பவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பறிமுதல்
பறிமுதல் செய்யப்பட்டுள்ள 1 டன் சுக்கின் மதிப்பு சுமார் ரூ.25 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுவரையிலும் இலங்கை கடத்துவதற்காக கொண்டு செல்லப்பட்ட மஞ்சள் மூடைகள், கஞ்சா, பீடி இலை உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் முதல் முறையாக சுக்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.