மேல்மருவத்தூர் சென்ற மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு

மேல்மருவத்தூர் சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.;

Update: 2021-12-19 13:49 GMT
சிறப்பான வரவேற்பு

தமிழ்நாட்டில் விபத்துகளில் சிக்கி படுகாயம் அடைகிறவர்களை காப்பாற்றுகிற வகையில் ‘இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48’ என்ற திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தை செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நேற்று நடந்த விழாவில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். விழாவுக்கு வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை மதுராந்தகம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பொன் சிவக்குமார் தலைமையில் வெங்கடேசன், ஒன்றிய அவைத்தலைவர், ஜெய்சங்கர், ஒன்றிய பொருளாளர், ஜி.டி.எம்.தெய்வசிகாமணி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் குமார், விவசாய அணி துணை அமைப்பாளர் ஆகியோர் தலைமையில் மதுராந்தகம் பாக்கம் என்ற இடத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் சித்தாமூர் ஒன்றிய கழக செயலாளர்கள் ஏழுமலை, சிற்றரசு, அச்சரப்பாக்கம் ஒன்றிய கழக செயலாளர் கண்ணன், அச்சரப்பாக்கம் பேரூர் கழக செயலாளர் உசேன், நிர்மல் குமார் ஆகியோர் தலைமையில் சோத்துப்பாக்கத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

மதுராந்தகம் அய்யனார் கோவில் அருகே மதுராந்தகம் நகர கழக செயலாளர் குமார், முன்னாள் நகர்மன்ற தலைவர் மலர்விழி குமார் தலைமையில் நகர துணைச்செயலாளர் சங்கர், விவசாய தொண்டரணி பிரபாகரன் முன்னாள் கவுன்சிலர் கோமதி ஆகியோர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

புகைப்படம் எடுத்து கொண்டார்

அங்கிருந்து மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் இல்லத்திற்கு சென்ற முதல்-அமைச்சர், பங்காரு அடிகளாரை சந்தித்து அவர்கள் குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அறக்கட்டளையின் துணைத்தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், மருத்துவகல்லூரியின் இயக்குனர் ரமேஷ், கல்லூரியின் தாளாளர் கோ.ப.அன்பழகன், என்ஜினீயரிங் கல்லூரியின் தாளாளர் கோ.ப.செந்தில்குமார், மேல்மருவத்தூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வக்கீல் அகத்தியன் ஆகியோர் வரவேற்று விழா மேடைக்கு அழைத்து சென்றனர்.

கோரிக்கை மனு

முன்னதாக சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை மார்க்கமாக செல்லும் போது வழியில் நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு திடீரென சென்று தடுப்பூசி முகாமை ஆய்வு செய்தார். அப்போது அங்கு இருந்த நந்திவரம்-கூடுவாஞ்சேரி முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் எம்.கே.தண்டபாணி, நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்தை தாலுகா ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்த வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனு வழங்கினார்.

அதேபோல நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகர தி.மு.க. பொறுப்பாளர் வக்கீல் ஜி.கே.லோகநாதன் நந்திவரம் பஸ் நிலையத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் முழு உருவ சிலை நிறுவ வேண்டுமென்று கோரிக்கை வைத்து மனுவை வழங்கினார். உரிய நடவடிக்கை எடுப்பதாக முதல்-அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்