வேலூரில் போக்குவரத்து மாற்றத்தால் அவதிக்குள்ளாகும் வாகன ஓட்டிகள். கூடுதலாக நெரிசல் ஏற்படுவதாக குற்றச்சாட்டு
வேலூரில் போக்குவரத்து மாற்றத்தால் அதிகமாக நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
வேலூர்
வேலூரில் போக்குவரத்து மாற்றத்தால் அதிகமாக நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
போக்குவரத்து மாற்றம்
வேலூர் மாநகரின் முக்கிய பகுதியாக கிரீன் சர்க்கிள் திகழ்கிறது. வேலூரில் இருந்து காட்பாடிக்கும், காட்பாடியில் இருந்து வேலூருக்கும் செல்வோர் இந்த வழியாக பயணம் செய்ய வேண்டும். அந்த பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும்.
இந்தநிலையில் கிரீன் சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சில போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன்படி நேஷனல் தியேட்டர் சந்திப்பு பகுதியில் இருந்து பெட்ரோல் பங்க் வழியாக (கிரீன் சர்க்கிள்-
சேண்பாக்கம்) சர்வீஸ் சாலைக்கு வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன. இதேபோல வேலூர் மக்கான் பகுதியில் வேலூரிலிருந்து வரும் வாகனங்கள் புதிய மீன் மார்க்கெட் சென்று பழைய பைபாஸ் சாலைக்கு திருப்பிவிடப்பட்டன. இதனால் வாகனங்கள் சுற்றிக்கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகள் அவதி
அதிலும் குறிப்பாக நேஷனல் தியேட்டர் சந்திப்பிலிருந்து சர்வீஸ் சாலைக்கு அனைத்து வாகனங்களும் (பஸ், லாரிகள் தவிர்த்து) திருப்பிவிடபடுகிறது. இதனால் சர்வீஸ் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சர்வீஸ் சாலை குறுகிய சாலையாக திகழ்வதால் அனைத்து வாகனங்களும் நீண்ட வரிசையில் நின்று மெதுவாக ஊர்ந்து செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.
போக்குவரத்து மாற்றம் செய்யப்படாமல் இருந்திருந்தால் கூட இவ்வளவு நெரிசல் ஏற்பட்டு இருக்காது என்று வாகன ஓட்டிகள் கருத்து தெரிவிக்கின்றனர். கிரீன் சர்க்கிளில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை போக்குவரத்து நெரிசலை கூடுதலாக உருவாக்குகிறது என வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர். போக்குவரத்து நெரிசலை குறைக்க புதியதாக பாலம் அமைக்க வேண்டும் அல்லது வேறு வழிகளை கையாள வேண்டும் என்றும் அல்லது சர்வீஸ் சாலையை அகலப்படுத்த வேண்டும் என்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.