கோகோ வளர்வதற்குரிய தட்பவெப்ப நிலை

கோகோ வளர்வதற்குரிய தட்பவெப்ப நிலை

Update: 2021-12-19 12:08 GMT
உடுமலை வட்டாரத்தில் தென்னையில் ஊடுபயிராக கோகோ வளர்வதற்குரிய தட்பவெப்ப நிலை உள்ளதாக விதை சான்று இயக்குனர் தெரிவித்தார்.
தென்னையில் ஊடுபயிர்
உடுமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தென்னை பிரதான பயிராக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இடு பொருட்களான தேவை குறைவு, வேலையாட்கள் பற்றாக்குறையான சூழல், நிலையான வருமானம் போன்ற காரணங்களால் தென்னை சாகுபடி பரப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. இயற்கை வழி வேளாண்மையை பின்பற்றும் தென்னை விவசாயிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
 திருப்பூர் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் பி.ஆ.மாரிமுத்து, உடுமலைஅங்ககப்பண்ணைகளில் ஆய்வு மேற்கொண்டார்.இதைத்தொடர்ந்து அவர் கூறியதாவது:-
 உடுமலை வட்டாரத்தில் தென்னையில் ஊடுபயிராக கோகோ வளர்வதற்குரிய தட்பவெப்ப நிலை நிலவுவதால் விவசாயிகள் ஊடுபயிர் சாகுபடி செய்து அதிக வருமானம் பெறலாம். கோகோ, சாக்லெட் உற்பத்திக்கான மூலப்பொருள் என்பதால் தேவையும், சந்தை வாய்ப்பும் அதிகமாக உள்ளது. கோகோ பயிர், நடவு செய்த 3 ஆண்டில் இருந்து 40 ஆண்டுகள் வரை பலன் கொடுக்கும்.தென்னையில் ஊடுபயிராக ஏக்கருக்கு 200 கோகோ செடிகள் நடவு செய்யலாம். காய்க்கத்தொடங்கிய முதல் ஆண்டில் மரத்திற்கு அரை கிலோ முதல் ஒரு கிலோ அளவிற்கு கோகோ விதைகள் கிடைக்கும். அடுத்தடுத்த ஆண்டுகளில் ஒரு மரத்திற்கு 2 கிலோ வரை கிடைக்கும். இதனால் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும்.
அங்ககச்சான்று
அங்ககச்சான்று பெற விரும்பும் விவசாயிகள் அதற்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், பண்ணையின் பொது விவரக்குறிப்பு, பண்ணையின் வரைபடம், ஆண்டு பயிர்த்திட்டம், மண் மற்றும் பாசன நீர் பரிசோதனை விவரம், துறையுடனான ஒப்பந்தம், நில ஆவணம், நிரந்தர கணக்கு எண், ஆதார் அட்டை நகல் மற்றும் விண்ணப்பதாரரின் கடவுச்சீட்டு அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன், சான்று கட்டணத்தை செலுத்த வேண்டும்.
விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட வட்டார விதைச்சான்று அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்