அனுமதி வழங்குவதில் தாமதம்

அனுமதி வழங்குவதில் தாமதம்;

Update: 2021-12-19 11:45 GMT
திருப்பூரில்  வீட்டுமனைகளுக்கான அங்கீகாரம் வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வீட்டு மனைகளுக்கான அனுமதி
திருப்பூர் மாவட்டத்தில் திட்டமிட்ட வீட்டுமனைகள் மற்றும் கட்டிடங்களுக்கு உள்ளூர் திட்ட குழுமம் அனுமதி வழங்குவதுடன், திட்டமிடப்படாத வீட்டு மனைகள் முறைப்படுத்தப்பட்டு டி.டி.சி.பி. அங்கீகாரமும் வழங்கப்படுகிறது. இந்த நிலையில்  திருப்பூர், கோவை, மதுரை, ஓசூர் ஆகிய 4 நகரங்களுக்கு புதிய நகர்ப்புற வளர்ச்சிக் குழுமங்கள் உருவாக்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. இதற்கான அரசாணை கடந்த மாதம் 22-ந்தேதி வெளியிடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் உள்ளூர் திட்டக் குழுமம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
 ஏற்கனவே திருப்பூர் உள்ளூர் திட்டக்குழுமத்தில் இருந்த 15 வேலம்பாளையம், தொட்டிபாளையம், நெருப்பெரிச்சல், மண்ணரை, நல்லூர், வீரபாண்டி, ஆண்டிபாளையம், இடுவாய், மங்கலம் உள்பட 16 கிராமங்கள் தவிர  கணக்கம்பாளையம், பொங்குபாளையம், நாச்சிபாளையம், பெருந்தொழுவு, உகாயனூர், அவினாசி, காளிபாளையம், கணியாம்பூண்டி, பெருமாநல்லூர் தெக்கலூர், திருமுருகன்பூண்டி, கணபதிபாளையம், கரைபுதூர், பூமலூர், சாமளாபுரம், செங்கப்பள்ளி உள்பட ஏராளமான கிராமங்கள் திருப்பூர் உள்ளூர் திட்டக் குழுமத்தின் கீழ் இணைக்கப்பட உள்ளன. 
கோரிக்கை
இந்த நிலையில் விரிவாக்கப்பட்டுள்ள திருப்பூர் உள்ளுர் திட்டக் குழுமத்தில் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வீட்டுமனைகளுக்கான அனுமதி வேண்டி வரும் விண்ணப்பங்களுக்கு புதிய நகர்ப்புற வளர்ச்சிக் குழுமம் உருவாக்கப்பட இருப்பதால் உடனடியாக அனுமதி வழங்க வேண்டாம் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விண்ணப்பித்த பொதுமக்களுக்கு வீட்டுமனை மற்றும் கட்டிடங்களுக்கான அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.  எனவே  திருப்பூர் உள்ளூர் திட்ட குழுமத்தில் வீட்டுமனைகளுக்கான அனுமதிக்காக விண்ணப்பித்தவர்களுக்கு தாமதம் செய்யாமல் உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்