கனமழையால் தேங்கிய குப்பைகளை அகற்ற 5 நாட்கள் தீவிர தூய்மை பணி: சென்னை மாநகராட்சி
பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-;
சென்னையில் கனமழை காரணமாக ஏற்பட்ட கழிவுகள் மற்றும் நீண்ட நாட்களாக தேங்கி கிடக்கும் குப்பைகள் மற்றும் கட்டிட கழிவுகளை முழுமையாக அகற்றிட ஏதுவாக தீவிர தூய்மை பணி 20-ந் தேதி(நாளை) முதல் 24-ந் தேதி வரை நடைபெற உள்ளது. தீவிர தூய்மை பணி திட்டத்தின் கீழ் மாநகராட்சிக்கு உட்பட்ட 358 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, 831 டன் குப்பைகள் மற்றும் 1,512 டன் கட்டிடகழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குடிசைப்பகுதிகள், அதிகளவில் குப்பைத்தேங்கியுள்ள இடங்கள், நீர்நிலைகள், திறந்தவெளி பெரிய கால்வாய்கள் மற்றும் நீரோடைகள் போன்ற இடங்களில் காணப்படும் குப்பைகள் முன்னுரிமையின் அடிப்படையில் அகற்றப்பட உள்ளன. 22-ந் தேதி (புதன்கிழமை) பிரத்யேகமாக பள்ளி வளாகங்கள், ஆஸ்பத்திரி வளாகங்கள் மற்றும் சுடுகாடு, இடுகாடு பகுதிகளில் நீண்ட நாட்களாக தேங்கியுள்ள குப்பைகள் அகற்றப்பட உள்ளன. இந்த பணியில் 4,493 தூய்மை பணியாளர்கள், 1,410 சாலைப்பணியாளர்கள், 109 காம்பேக்டர்கள், 253 ஜே.சி.பி. எந்திரங்கள், 308 டிப்பர் லாரிகள், 537 பேட்டரியால் இயங்கும் வாகனங்கள், 276 மூன்று சக்கர வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இந்த தீவிர தூய்மை பணியில் அந்தந்த மண்டல அலுவலர்கள் தலைமையில் செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள் அன்றாடம் கள ஆய்வு மேற்கொண்டு பணிகளை சிறப்பாக செயல்படுத்தி தனிக்கவனம் செலுத்திடுமாறு மாநகராட்சி கமிஷனர் அறிவுறுத்தி உள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.