தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பெண் பலி

முக்கூடலில் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பெண் பலியானார். மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Update: 2021-12-18 21:47 GMT
முக்கூடல்:
தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த சிலர் தங்களது குடும்பத்தினர், உறவினர்களுடன் நேற்று காலையில் வேனில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்றனர். பின்னர் மாலையில் அங்கிருந்து வேனில் திரும்பி வந்தனர். அவர்கள் மாலை 5 மணியளவில் நெல்லை மாவட்டம் முக்கூடல் முத்துமாலையம்மன் கோவில் தென்புறம் தாமிரபரணி ஆற்றில் குளித்தனர்.

அப்போது கடையநல்லூரைச் சேர்ந்த திவான் மைதீன் மனைவி ரெசவுமா (வயது 47), அக்பர் மனைவி ரகுமத்நிஷா (32), மஸ்தான் மகன் மைதீன் (35) ஆகிய 3 பேரும் ஆற்றில் மூழ்கி தத்தளித்தனர். இதனைப் பார்த்த அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் கூச்சலிட்டனர். உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, தண்ணீரில் மூழ்கிய 3 பேரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

பின்னர் அவர்களை சிகிச்சைக்காக முக்கூடல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ரெசவுமாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ரகுமத்நிஷா, மைதீன் ஆகிய 2 பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், முக்கூடல் போலீசார் விரைந்து சென்று, ரெசவுமாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்