மின்சாரம் பாய்ந்து கட்டிட தொழிலாளி பலி
மின்சாரம் பாய்ந்து கட்டிட தொழிலாளி இறந்தார்.
ஜெயங்கொண்டம்:
கட்டிட தொழிலாளி
தஞ்சாவூர் மாவட்டம் தத்துவாஞ்சேரி கிராமம் தர்மபிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்லையா(வயது 54). இவர் கட்டிட பணிக்கான சென்ட்ரிங் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி லதா என்ற மனைவியும்(42), ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர்.
இந்நிலையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சின்னவளையம் மெயின்ரோட்டில் உள்ள அழகுமணிகண்டன் என்பவரது வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில் கட்டிட வேலை செய்த செல்லையா, முதல் மாடியில் இரும்புக் கம்பிகளை எடுத்து அடுக்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் முன்பாக மேலே செல்லும் உயரழுத்த மின்கம்பியில் எதிர்பாராதவிதமாக கம்பி பட்டதால், மின்சாரம் பாய்ந்து செல்லையா தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார்.
சாவு
இதைக்கண்ட அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து கட்டைகளுடன் நின்று அவரை மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மின்சாரம் நிறுத்தப்பட்டது. பின்னர் செல்லையாவுக்கு அருகில் இருந்தவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்து அவரை காப்பாற்ற முயன்றனர்.
மேலும் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் சேர்க்கப்பட்டார். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் செல்லையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களையும், அவரது குடும்பத்தையும் சோகத்தில் ஆழ்த்தியது.