80 கிலோ மீட்டர் கடந்து உரிமையாளர் வீட்டிற்கு திரும்பிய நாய்

வனப்பகுதியில் விடப்பட்ட நாய் 80 கிலோ மீட்டர் கடந்து உரிமையாளர் வீட்டிற்கு திரும்பி வந்தது.

Update: 2021-12-18 21:37 GMT
தாமரைக்குளம்:
அரியலூர் அருகே உள்ள தாமரைகுளம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால். இவர் கடந்த 5 ஆண்டுகளாக ஒரு நாயை செல்லமாக வளர்ந்து வருகிறார். ஸ்பைகி என்று பெயரிடப்பட்ட அந்த நாயை கடந்த 2 நாட்களுக்கு முன்பு காணவில்லை. இதனால் ராஜகோபால் பல இடங்களில் தேடியும் நாய் கிடைக்காததால், அப்பகுதியில் உள்ளவர்களிடம் விசாரித்தார். அப்போது ஒரு ஆலை நிர்வாகத்தின் சார்பில் அந்த பகுதியில் சுற்றித்திரிந்த ஏராளமான நாய்களை பிடித்து சென்றதாக தெரியவந்தது. இதையடுத்து ராஜகோபால் மற்றும் அவரது நண்பர்கள் லாரிகளை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர். போலீசாரின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவர்கள் லாரிகளை விடுவித்தனர். மேலும் பிடித்து செல்லப்பட்ட நாய்கள், பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் வனப்பகுதியில் விடப்பட்டதாக கிடைத்த தகவலையடுத்து, அந்த பகுதிக்கு சென்று தேடி பார்த்தனர். ஆனால் நாய் கிடைக்கவில்லை. இதனால் ராஜகோபால் குடும்பத்தினர் கவலையடைந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை அந்த நாய் வீட்டிற்கு திரும்பி வந்தது. வனப்பகுதியில் விடப்பட்டதாக கூறப்படும் நிலையில் சுமார் 80 கிலோ மீட்டர் தூரம் கடந்து அந்த நாய் உரிமையாளர் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் ராஜகோபால் குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.

மேலும் செய்திகள்