சிங்கப்பூர், ஸ்பெயினில் இருந்து ஈரோடு வந்த 2 பேருக்கு கொரோனா;

சிங்கப்பூர்-ஸ்பெயினில் இருந்து ஈரோட்டுக்கு வந்த 2 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு உள்ளதா? என்பதை தெரிந்துகொள்ள அவர்களின் ரத்த மாதிரிகள் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Update: 2021-12-18 21:25 GMT
ஈரோடு
சிங்கப்பூர்-ஸ்பெயினில் இருந்து ஈரோட்டுக்கு வந்த 2 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு உள்ளதா? என்பதை தெரிந்துகொள்ள அவர்களின் ரத்த மாதிரிகள் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 
ஒமைக்ரான் வைரஸ்
கொரோனா வைரஸ் அடிக்கடி உரு மாற்றம் அடைந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது கட்டுக்குள் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் பெரும்பாலானோர் தடுப்பூசி போட்டுக்கொண்டது ஆகும்.
இந்தநிலையில் தென்னாப்பிரிக்கா, ஜெர்மனி உட்பட பல்வேறு வெளி நாடுகளில் அதிகமுறை உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரசான ஒமைக்ரான் வைரஸ் இந்த மாத தொடக்கத்தில் கண்டறியப்பட்டு உள்ளது. இந்த தொற்று விரைவாக பரவக்கூடியது என்றும், நோய் எதிர்ப்பை எளிதில் தவிர்க்க கூடிய தன்மை உடையது என்றும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தீவிர நடவடிக்கை
இதனால் ஒமைக்ரான் வைரசை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு விமான நிலையத்திலேயே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
இந்தியாவில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மத்திய, மாநில அரசுகளின் சுகாதாரத்துறை பல்வேறு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்திலும் ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதை தொடர்ந்து முககவசம் அணிதல், தனிநபர் இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன.
2 பேருக்கு கொரோனா
தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயனாளிகள் முழுமையான பரிசோதனைக்கு உட்படுத்தியும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் வருகின்றனர்.
இதற்கிடையில் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து இதுவரை 183 பேர் ஈரோடு மாவட்டத்துக்கு வந்துள்ளனர். இவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இதில் 65 பேருக்கு ஒரு வார காலம் முடிவடைந்ததால் அவர்களுக்கு 2-வது கட்டமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
ஒமைக்ரான் பாதிப்பா?
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
வெளி நாடுகளில் இருந்து ஈரோடு மாவட்டத்துக்கு வந்த 2 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதில் ஒருவர் சிங்கப்பூரில் இருந்தும், மற்றொருவர் ஸ்பெயின் நாட்டில் இருந்தும் வந்தவர்கள் ஆவர். இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரும் உடனடியாக சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இவர்கள் 2 பேருக்கும், ஒமைக்ரான் பாதிப்பு உள்ளதா? என்பதை கண்டறிவதற்காக அவர்களது சளி, ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு சென்னையில் உள்ள பரிசோதனை ஆய்வகத்திற்கு அனுப்பபட்டுள்ளன. அங்கு பரிசோதனை முடிந்து, அறிகுறிகள் இருப்பது தெரியவந்தால், அடுத்த கட்ட பரிசோதனைக்காக பெங்களூருவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பிறகே அவர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு உள்ளதா என்பது குறித்து தெரியவரும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்