மர்ம சாவு வழக்கில் திருப்பம்: சேலத்தில் திருநங்கையை கொன்ற தாய் உள்பட 6 பேர் கைது-பரபரப்பு தகவல்கள்
சேலத்தில் திருநங்கை மர்ம சாவு வழக்கில் திடீர் திருப்பமாக அவரை கொலை செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக அவரது தாய் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலம்:
சேலத்தில் திருநங்கை மர்ம சாவு வழக்கில் திடீர் திருப்பமாக அவரை கொலை செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக அவரது தாய் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருநங்கை
சேலம் ஜாகீர்அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் உமாதேவி (வயது 45). இவருடைய மகன் நவீன்குமார் (19). 10-ம் வகுப்பு வரை படித்துள்ள இவர், திருநங்கையாக மாறி தனது பெயரை அக்ஷிதா என்று மாற்றிக்கொண்டார். இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு தனது மகனை காணவில்லை என்றும், அவரை கண்டுபிடித்து தரக்கோரியும் சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் உமாதேவி புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், திருநங்கை நவீன்குமார் பெங்களூருவில் சக திருநங்கைகளுடன் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று அவரை மீட்டு சேலத்திற்கு அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அதன்பிறகு அவரது விருப்பத்திற்கு ஏற்ப மீண்டும் பெங்களூருவுக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
மர்மசாவு
இதனிடையே, தீபாவளி பண்டிகைக்கு சேலத்திற்கு வந்த நவீன்குமார் அதன்பிறகு வீட்டில் தாயுடன் வசித்து வந்தார். அதேசமயம், சக்தி என்ற வாலிபருடன் அவருக்கு காதல் ஏற்பட்டதாகவும், இதனால் அவர்கள் இருவரும் கடந்த வாரம் ஏற்காட்டுக்கு சென்றுவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த 13-ந் தேதி உடலில் சிராய்ப்பு காயங்களுடன் இருந்த திருநங்கை நவீன்குமார் சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு திடீரென சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது தொடர்பாக சூரமங்கலம் போலீசார் முதலில் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இருப்பினும் அவரது சாவில் மர்மம் நீடித்தது. மேலும், அவரது தாய் உமாதேவி மற்றும் காதலன் சக்தி ஆகியோரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.
தாயிடம் விசாரணை
இதையடுத்து உமாதேவியிடம் நடத்திய விசாரணையில், அவர் ஆட்களை வைத்து தனது மகனை கொலை செய்திருப்பது உறுதி செய்யப்பட்டது. நவீன்குமார் திருநங்கையாக மாறியது அவரது தாய் உமாதேவிக்கு பிடிக்கவில்லை. மேலும், அவர் வசித்து வரும் வீடு சொந்தமானது என்பதால் சக திருநங்கைகளுடன் வீட்டில் குடியேறிவிடுவாரோ? என்று உமாதேவிக்கு சந்தேகம் எழுந்தது. இதனால் அவரது கை, கால்களை உடைத்து போட்டால் வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே கிடப்பார் என்று உமாதேவி முடிவு செய்து, அதே பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரை அழைத்து பேசியுள்ளார். இதையடுத்து வீட்டில் இருந்த திருநங்கை நவீன்குமாரை வெங்கடேஷ் உள்பட 5 பேர் சேர்ந்து இரும்பு ராடால் அடித்து தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார். பின்னர் பேச்சுமூச்சு இன்றி மயங்கி விழுந்த அவரை தாய் உள்ளிட்ட சிலர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தபோது, சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
6 பேர் கைது
தொடர்ந்து போலீசார் சந்தேக மரணம் வழக்கை கொலை வழக்காக மாற்றினார்கள். இந்த வழக்கில் உமாதேவி மற்றும் ஜாகீர்அம்மாபாளையத்தை சேர்ந்த வெங்கடேஷ் (46), காமராஜ் (40), சந்தோஷ் (29), கார்த்திக் (25), வெள்ளக்கல்பட்டியை சேர்ந்த சிவக்குமார் (31) ஆகிய 6 பேரையும் நேற்று சூரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.