பெருந்துறையில் மாவட்ட அளவிலான கபடி போட்டி

பெருந்துறையில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடந்தது.

Update: 2021-12-18 21:17 GMT
பெருந்துறை
பெருந்துறையில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடந்தது.
கபடி போட்டி
ஈரோடு மாவட்ட கபடி ஒருங்கிணைப்பு குழு சார்பில் மாவட்ட அளவிலான கபடி போட்டி பெருந்துறையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தின் உள் அரங்கில் நடைபெற்றது.  இதற்காக ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலர் அணிகள் விளையாட தனித்தனியாக 4 ஆடுகளங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 
நேற்று முதல் நாள் போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் 6 பெண்கள் அணிகள் கலந்து கொண்டு விளையாடின. சென்னிமலை வீ.கே.சி. அணிக்கும், பூச்சக்காட்டுவலசு பி.கே.வி. அணிக்கும் இடையே முதல் போட்டி நடைபெற்றது.
பூச்சக்காட்டுவலசு அணி
 இதில் 51 புள்ளிகள் பெற்று பூச்சக்காட்டுவலசு அணி வெற்றி பெற்றது. கோபி பி.கே.ஆர். அணிக்கும், பள்ளியூத்து நவரசம் அணிக்கும் இடையே நடந்த 2-வது போட்டியில் பி.கே.ஆர். அணி 24 புள்ளிகளும், ஊஞ்சலூர் அணிக்கும், கோபி அணிக்கும் இடையே நடந்த 3-வது போட்டியில் கோபி அணி 34 புள்ளிகளும் எடுத்து வெற்றி பெற்றன. 
லீக் அடிப்படையில் நடக்கும் இந்த கபடி போட்டியில் வெற்றி பெறும் ஆண்கள் அணிக்கு, முதல் பரிசாக ரூ.30 ஆயிரம் மற்றும் கோப்பையும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.20 ஆயிரம் மற்றும் கோப்பையும், 3-வது மற்றும் 4-வது இடங்களைப் பெறும் அணிகளுக்கு, தலா ரூ.10 ஆயிரமும் பரிசாக வழங்கப்படுகிறது. 
பெண்கள் அணி
இதேபோல் பெண்கள் அணியில் முதல் பரிசு பெறும் அணிக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் கோப்பையும், 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.7 ஆயிரம் மற்றும் கோப்பையும், 3-வது மற்றும் 4-வது இடங்களை பெறும் அணிகளுக்கு தலா ரூ.3 ஆயிரமும் பரிசாக வழங்கப்படுகிறது.
இந்த கபடி போட்டி இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. கபடி போட்டிகளை கண்டு ரசிக்க ஏராளமான ரசிகர்கள் திருமண மண்டபத்தில் கூடி இருந்தனர்.

மேலும் செய்திகள்