பெலகாவியில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை - மந்திரி அரக ஞானேந்திரா உறுதி

பெலகாவியில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி என்று போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா தெரிவித்துள்ளார்.

Update: 2021-12-18 20:20 GMT
பெங்களூரு:

பெலகாவியில் நேற்று போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

சட்டப்படி நடவடிக்கை

  பெலகாவியில் கடந்த ஓரிரு நாட்களாக ஒரு கும்பல் அட்டூழியத்திலும், வன்முறையிலும் ஈடுபட்டு வருகின்றனர். அரசு வாகனங்களுக்கு தீவைப்பது, கற்களை வீசி தாக்குவது போன்ற செயல்களில் ஈடுபட்ட அவர்கள், நாட்டின் சுதந்திரத்திற்காக போராடி வீரமரணம் அடைந்த சங்கொள்ளி ராயண்ணாவின் சிலையையும் சேதப்படுத்தி நாச வேலையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளிடம் இருந்து தகவல்களை பெற்றுள்ளேன். வன்முறையில் ஈடுபட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

  வன்முறையில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது எந்த விதமான பாரபட்சமும் இன்றி சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி. அதில் இருந்து பின்வாங்கப் போவதில்லை. இதுபோன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதை அரசு சகித்து கொண்டு இருக்காது.

கண்டிக்கத்தக்கது

  வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 25-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெலகாவியில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை பயன்படுத்தி கொண்டு மர்மநபர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இதுபோன்ற வன்முறையில் ஈடுபடுபவர்கள் ஒடுக்கப்படுவார்கள். நமது நாட்டின் சுதந்திர போராட்டத்திற்காக பாடுபட்டவர்கள் சங்கொள்ளி ராயண்ணாவும், சிவாஜியும் ஆவார்கள்.

  நாட்டின் சுதந்திரத்திற்காக 2 பெரும் தலைவர்கள் தங்களது உயிரையே தியாகம் செய்தார்கள். அப்படிப்பட்ட தலைவர்களின் சிலைகளை அவமதிப்பது, சேதப்படுவது கண்டிக்கத்தக்கது. அந்த தலைவர்கள் வகுத்து கொடுத்த பாதையில் நாம் செல்ல வேண்டும். அதை விட்டு விட்டு, அவர்களது சிலைகளை அவமதிப்பது சரியானது அல்ல. இதுபோன்ற செயல்களில் தேச பக்தர்கள் யாரும் ஈடுபட மாட்டார்கள்.

ஆதங்கப்பட வேண்டாம்

  பெலகாவியில் நடந்த வன்துறை சம்பவம் குறித்து பெலகாவி மற்றும் பெங்களூரு உயர் போலீஸ் அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி உள்ளேன். வன்முறையில் ஈடுபட்ட அனைவரின் மீதும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். பெலகாவியில் கன்னடர்கள், மராட்டியர்கள் நிம்மதியாக வாழ்ந்து வருகிறார்கள். அங்கு மக்கள் அமைதியாக வாழ தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டடுள்ளது.

  சில சமூக விரோதிகள் வன்முறையில் ஈடுபட்டு சட்டம்-ஒழுங்குக்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன், பொதுமக்களின் அமைதியை கெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பெலகாவியில் நிலைமை கட்டுக்குள் வந்திருப்பதால் மக்கள் யாரும் ஆதங்கப்பட வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன். தேவையில்லாமல் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என மக்களிடம் கேட்டு கொள்கிறேன்.
  இவ்வாறு மந்திரி அரக ஞானேந்திரா கூறினார்.

மேலும் செய்திகள்