கா்நாடகத்தில் பா.ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிக்க எடியூரப்பாவுக்கு முக்கிய பொறுப்பு - மேலிட தலைவர்கள் திட்டம்

கர்நாடகத்தில் பா.ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிக்க முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு முக்கிய பொறுப்பு வழங்க பா.ஜனதா மேலிட தலைவர்கள் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Update: 2021-12-18 20:09 GMT
பெங்களூரு:

தேர்தலில் தோல்வி

  கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சியில் முதல்-மந்திரியாக இருந்த எடியூரப்பா மாற்றப்பட்டு, பசவராஜ் பொம்மை புதிய முதல்-மந்திரியாகி உள்ளார். இந்த நிலையில், பசவராஜ் பொம்மை முதல்-மந்திரி ஆன பின்பு நடந்த இடைத்தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. குறிப்பாக பசவராஜ் பொம்மையின் சொந்த மாவட்டமான ஹனகல் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜனதா தோல்வியை தழுவியது.

  மேலும் கர்நாடக மேல்-சபைக்கு நடந்த 25 தொகுதிகளுக்கான தோ்தலில் 11 தொகுதிகளில் மட்டுமே பா.ஜனதா வெற்றி பெற்றது. 15 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று பா.ஜனதா திட்டமிட்டு இருந்தது. ஆனால் அந்த திட்டம் வெற்றி பெறவில்லை. இதற்கு முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டது மற்றும் அவரிடம் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவுகளே காரணம் என்று பா.ஜனதா மேலிட தலைவர்களின் கவனத்திற்கு சென்றதாக தெரிகிறது.

எடியூரப்பாவிடம் ஆலோசிக்க...

  வருகிற 2023-ம் ஆண்டு நடைபெறும் கர்நாடக சட்டசபை தோ்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்க மேலிட தலைவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். எடியூரப்பா முதல்-மந்திரியாக இருந்தபோது நடந்த இடைத்தேர்தல்களில் பா.ஜனதா அமோக வெற்றியை பெற்றிருந்தது. இதனால் 2023-ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்றால், எடியூரப்பாவின் பங்களிப்பு மிகவும் முக்கியம் என்று பா.ஜனதா மேலிட தலைவர்கள் கருதுகிறார்கள். இதன் காரணமாக எடியூரப்பாவுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்க பா.ஜனதா மேலிடம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

  அதாவது மாநிலத்தில் கட்சியை வளர்க்க எடியூரப்பாவின் கருத்துகளை கேட்பது, கட்சியில் நிர்வாகிகளுக்கு முக்கிய பொறுப்புகளை வழங்கும் போது, எடியூரப்பாவின் ஆலோசனைகளை பெறுவது, அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டால், அதனை எதிர்க்காமல் ஆதரவு தெரிவிப்பது, சுற்றுப்பயணத்தின் போது மந்திரிகள், பிற தலைவர்களை பங்கேற்க அனுமதி அளிப்பது உள்ளிட்டவற்றை மேற்கொள்ளும்படி பசவராஜ் பொம்மைக்கும், மாநில தலைவர் நளின்குமார் கட்டீலுக்கும் பா.ஜனதா மேலிடம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

பொறுப்பு வழங்க முடிவு

  உத்தரபிரதேச மாநிலத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த பா.ஜனதா முதல்-மந்திரிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பசவராஜ் பொம்மையிடம், எடியூரப்பாவுக்கு முக்கிய பொறுப்பு கொடுப்பது குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து, உத்தரபிரதேசத்தில் இருந்து பசவராஜ்பொம்மை, கர்நாடகம் திரும்பியதும், எடியூரப்பாவை சந்தித்து பேசி இருந்தார். அப்போது பா.ஜனதா மேலிடம் கூறிய தகவல்களை எடியூரப்பாவிடம் பசவராஜ் பொம்மை தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

  அத்துடன் சட்டசபை தோ்தல் நெருங்கும் முன்பாக எடியூரப்பாவுக்கு முக்கிய பொறுப்பை கொடுக்க முடிவு செய்திருப்பதாகவும், அதுபற்றி பா.ஜனதா தலைவர்கள் திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்மூலம் கர்நாடக பா.ஜனதாவில் தான் ஒரு அசைக்க முடியாத தலைவர் என்பதையும், தன்னை கட்சியில் இருந்து ஓரங்கட்ட முடியாது என்பதையும் இடைத்தோ்தல், மேல்-சபை தேர்தல் முடிவுகள் மூலம், பா.ஜனதா மேலிடத்திற்கு எடியூரப்பா தெரிவித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

மேலும் செய்திகள்