ஆபத்தான பள்ளங்களால் வாகன ஓட்டிகள் அவதி
தஞ்சையில் இருந்து நாஞ்சிக்கோட்டை செல்லும் சாலையின் நடுவே உள்ள அபாய பள்ளங்களால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சையில் இருந்து நாஞ்சிக்கோட்டை செல்லும் சாலையின் நடுவே உள்ள அபாய பள்ளங்களால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
அபாய பள்ளங்கள்
தஞ்சை மேரீஸ் கார்னரில் இருந்து நாஞ்சிக்கோட்டைக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் வழியாக நாஞ்சிக்கோட்டை, மருங்குளம், திருவோணம், உழவர் சந்தை, உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராமானோர் சென்று வருகின்றனர். இந்த சாலையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளும், வருமான வரி அலுவலகம், மாவட்ட தொழில் மையம், வேளாண் விரிவாக்க மையம், சிப்கோ தொழிற் பேட்டை உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
மேலும் மேற்கண்ட பகுதிகளில் இருந்து தஞ்சைக்கும் இதே சாலையின் வழியாக தான் வருகின்றனர். மேலும் இந்த சாலையில் அரசு மற்றும் தனியார் பஸ்களும் இருமார்க்கங்களிலும் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் இந்த சாலையில் எப்போதும் போக்குவரத்து அதிகமாக காணப்படும்.
சீரமைக்க கோரிக்கை
இவ்வாறு போக்குவரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த சாலையில் வணிக வரி அலுவலகம் அருகே மற்றும் ஒரு தனியார் திருமணம் மண்டபம் அருகிலும் சாலையின் நடுவே உள்வாங்கியும், சாலைகள் சேதமடைந்தும் காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் சாலையின் நடுவே உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் சாலை எது? பள்ளம் எது? என்று தெரியாமல் இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துகளில் சிக்கி வருகின்றனர்.
இதே போல் கல்லுக்குளம் ஆரம்பசுகாதார நிலையம் அருகில் பூக்கார தெரு பிரிவு சாலை பகுதியில் பாதாள சாக்கடையின் மூடி உடைந்து சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதியிலும் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்ட வண்ணம் உள்ளன. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையின் நடுவே ஏற்பட்ட பள்ளத்தை சீரமைத்து தர வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.