சேதமடைந்த அரசு உதவிபெறும் பள்ளிக்கு ‘சீல்’
சிவகாசியில் சேதமடைந்து காணப்பட்ட அரசு உதவி பெறும் பள்ளிக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
சிவகாசி,
சிவகாசியில் சேதமடைந்து காணப்பட்ட அரசு உதவி பெறும் பள்ளிக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
அதிகாரிகள் ஆய்வு
நெல்லையில் உள்ள ஒரு பள்ளியில் சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியான சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பள்ளி கட்டிடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்தநிலையில் சிவகாசி-விருதுநகர் மெயின் ரோட்டில் உள்ள அரசு உதவி பெறும் ஆரம்பப்பள்ளியில் சிவகாசி சப்-கலெக்டர் பிரிதிவிராஜ், தாசில்தார் ராஜ்குமார் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அந்த பள்ளி கட்டிடத்தின் மேற்பூச்சு பல இடங்களில் சேதமடைந்து உள்ளே இருக்கும் கம்பிகள் தெரியும்படி இருந்தது. உடனே சப்-கலெக்டர் பிரிதிவிராஜ், பள்ளியில் அமர்ந்து இருந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை உடனே வெளியேற்றி பள்ளிக்கு ‘சீல்’ வைக்க உத்தரவிட்டார்.
பள்ளிக்கு ‘சீல்’
பின்னர் தாசில்தார் ராஜ்குமார் முன்னிலையில் வருவாய்த்துறையினர் அந்த பள்ளி கட்டிடத்துக்கு ‘சீல்’ வைத்தனர். இதேபோல் மீனம்பட்டி பகுதியில் பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடத்தில் ஒரு மேல்நிலை குடிநீர் தொட்டி சேதம் அடைந்து காணப்பட்டது. இதை அகற்ற தாசில்தார் உத்தரவிட்டார். விரைவில் அந்த மேல்நிலை குடிநீர் தொட்டி யூனியன் அதிகாரிகள் முன்னிலையில் அகற்றப்படும் என்று கூறப்படுகிறது.
பொதுமக்கள் தங்கள் பகுதியில் சேதம் அடைந்த கட்டிடம் இருந்தால் அது குறித்து தாலுகா அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தால் அதை அகற்ற தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் ராஜ்குமார் கூறினார்.