கீரிப்பாறை-காளிகேசம் பகுதிகளில் ரூ.6 கோடியில் உயர்மட்ட பாலம்
15 ஆண்டுகளுக்குப்பிறகு கீரிப்பாறை, காளிகேசம் பகுதிகளில் ரூ.6 கோடியில் உயர்மட்டப்பாலம் அமைக்க கலெக்டர் அரவிந்த் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் நேரடியாக அப்பகுதிகளை ஆய்வு செய்தனர்.
நாகர்கோவில்,
15 ஆண்டுகளுக்குப்பிறகு கீரிப்பாறை, காளிகேசம் பகுதிகளில் ரூ.6 கோடியில் உயர்மட்டப்பாலம் அமைக்க கலெக்டர் அரவிந்த் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் நேரடியாக அப்பகுதிகளை ஆய்வு செய்தனர்.
மக்களுக்கு சிரமம்
குமரி மாவட்டத்தில் அடர்ந்து வனப்பகுதியை ஒட்டி கீரிப்பாறை, காளிகேசம் ஆகிய கிராமங்கள் அமைந்துள்ளன. இந்த பகுதிகளில் ரப்பர், கிராம்பு போன்ற பயிர்கள் சாகுபடி செய்யும் தோட்டங்கள் அதிகமாக உள்ளன. இதனால் அந்த பகுதிகளுக்கு கிராம மக்கள் மட்டுமின்றி வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களும் அதிகமாக சென்று வருகிறார்கள்.
இந்தநிலையில் இந்த கிராமங்களுக்கு இடையே செல்லும் ஆறுகளுக்கு மேல் அமைக்கப்பட்டு இருந்த சப்பாத்து பாலங்கள் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளத்தால் சேதம் அடைந்தது. இதனால் அந்த சப்பாத்து பாலம் வழியாக மக்கள் கடந்த செல்ல மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள்.
2 உயர்மட்ட பாலங்கள்
சேதமடைந்த சப்பாத்து பாலங்கள் வனத்துறைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ளதால் அவற்றை சீரமைக்க வனத்துறையிடம் இருந்து ஒப்புதல் கிடைக்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 1980-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட அரசாணையின்படி ஏற்கனவே உள்ள சாலைகள், பாலங்கள் ஆகியவற்றை சீரமைக்க அனுமதிக்கலாம் என வனத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இதையடுத்து குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் உத்தரவின்பேரில் மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளனர். அதன்படி கீரிப்பாறையில் சேதமடைந்த சப்பாத்து பாலத்தை அகற்றிவிட்டு 100 மீட்டர் நீளத்துக்கு ரூ.4 கோடியிலும், காளிகேசத்தில் சேதமடைந்த சப்பாத்து பாலத்தை அகற்றிவிட்டு 50 மீட்டர் நீளத்துக்கு ரூ.2 கோடியிலும் உயர்மட்டப் பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யக்கோரி அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி விரைவில் ஒதுக்கீடு செய்யப்படும் எனக்கூறப்படுகிறது.
அதிகாரிகள் ஆய்வு
அதற்கு முன்னதாக உயர்மட்டப் பாலம் அமைய உள்ள கீரிப்பாறை, காளிகேசம் பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் பாஸ்கரன், மாவட்ட வனத்துறை அதிகாரி இளையராஜா ஆகியோர் இந்த 2 இடங்களையும் நேரில் ஆய்வு செய்தனர். பின்னர் அதிகாரிகள் தடிக்காரன்கோணத்தில் இருந்து குமார்பால்குளம் வரையிலான 3 கி.மீ. தூரத்துக்கு ரூ.3 கோடியில் சாலை அமைக்க கருத்துரு அனுப்பியுள்ள பகுதியையும் ஆய்வு செய்தனர்.
தற்காலிக சீரமைப்பு
பின்னர் மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பாஸ்கரன் கூறியதாவது:-
கீரிப்பாறை, காளிகேசம் ஆகிய பகுதிகளில் 15 ஆண்டுகளுக்கு மேலாக சப்பாத்து பாலங்கள் சேதமடைந்து கிடந்தது. கலெக்டர் நடவடிக்கை எடுத்ததின் விளைவாக இந்த 2 சப்பாத்து பாலங்களையும் அகற்றிவிட்டு உயர்மட்டப் பாலம் ரூ.6 கோடியில் அமைக்க அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளோம். அந்த நிதி வந்ததும் இந்த பால வேலைகள் தொடங்கும். இந்த பகுதிகள் வனத்துறையின் கட்டுப்பாட்டு பகுதியில் இருப்பதால் நானும், வனத்துறை அதிகாரியும் நேரில் ஆய்வு செய்தோம்.
குமரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் மாநில நெடுஞ்சாலைப் பகுதிகளில் 29 இடங்களில் சுமார் 120 கி.மீ. நீளத்துக்கு சாலைகள் சேதமடைந்துள்ளன. அவற்றை மண்கொட்டியும், பேட்ஜ் ஒர்க் மூலமும் தற்காலிகமாக சீரமைக்க அரசு ரூ.1.75 கோடி நிதியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அந்த நிதியில் இருந்து கடந்த சில நாட்களாக பணிகள் நடந்து வருகிறது. நாகர்கோவில் நகரப்பகுதியில் மட்டும் ஆங்காங்கே 3 கி.மீ. நீளத்துக்கு பேட்ஜ் ஒர்க் முடிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பிற பகுதிகளில் 117 கி.மீ. நீளத்துக்கு பேட்ஜ் ஒர்க் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இந்தப் பணிகளை வருகிற பொங்கல் பண்டிகைக்கு முன்பாக முடிக்க திட்டமிட்டுள்ளோம்.
ரூ.44.80 கோடி நிதி
அதேபோல் மழை வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகளை நிரந்தரமாக சீரமைக்க ரூ.44.80 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயாரித்து அனுப்பியுள்ளோம். அந்த நிதியும் விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அதில் அனைத்து மாநில நெடுஞ்சாலைகளும் நிரந்தரமாக சீரமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.