புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குடிநீர் குழாயில் உடைப்பு
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சியில் குடிநீர் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சில பகுதிகளில் குறைந்த அளவிலேயே தண்ணீர் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. எனவே குடிநீர் குழாய் உடைப்பை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைக்க வேண்டும்.
காதர்்மீரா, ஆர்.எஸ்.மங்கலம்.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
மதுரை மாவட்டம் பரவை விவேகானந்தர் தெருவில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே வீடுகளின் முன்பு தேங்கி நிற்கிறது. துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்டதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
நித்யகல்யாணி, பரவை.
ஆபத்தான பள்ளி சுற்றுச்சுவர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட இனம்கரிசல்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்குள்ள கழிவறை, பள்ளி கட்டிடம், சுற்றுச்சுவர் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. மேலும் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விட்டது. மீதம் உள்ள சுவரும் இடியும் நிலையில் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.
தேன்கனி, ஸ்ரீவில்லிபுத்தூர்.
சாலையில் மணல் குவியல்
மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா மேலக்கோட்டையில் இருந்து சிவரக்கோட்டை வரை சாலையின் ஓரத்தில் சாலை பணிக்காக மணல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். எனவே சாலைப்பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சரவணன், சிவரக்கோட்டை.
பயணிகள் அச்சம்
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அடுத்த சிறுபாலை கிராமத்தில் பயணிகள் நிழற்கூட மேற்கூரை பெயர்ந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் இங்கு வரும் பயணிகள் அச்சத்துடன் தான் நின்று செல்கின்றனர். எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறும் முன்பு ஆபத்தான பயணிகள் நிழற்கூடத்தை அகற்றிவிட்டு புதிய பயணிகள் நிழற்கூடம் அமைக்க வேண்டும்.
ராஜா, சிறுபாலை.
குடிநீர் வசதி வேண்டும்
சிவகாசி சார் ஆட்சியர் அலுவலகம், தாசில்தார் அலுவலகத்திற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்த அலுவலகங்களில் குடிநீர் வசதி செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் இங்கு வருபவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். குடிநீரை விலை கொடுத்து வாங்கி குடிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, இங்கு குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும்.
விநாயகமூர்த்தி, மீனம்பட்டி.
திறந்து கிடக்கும் சாக்கடை கால்வாய்
மதுரை தெப்பக்குளம்-விரகனூர் செல்லும் வழியில் சாக்கடை கால்வாய் மூடப்படாமல் திறந்த நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கால்வாய்க்குள் தவறி விழும் அபாயம் உள்ளது. சாக்கடை கால்வாயை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ஜெய், மதுரை.
பெயர்ந்து காணப்படும் மேற்கூரை
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள சின்னாண்டி வலசையில் உள்ள பள்ளி கட்டித்தின் மேற்கூரை ஆங்காங்கே பெயர்ந்து காணப்படுகின்றன. அது எப்போது விழும் என்ற நிலையில் உள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், சின்னாண்டிவலசை.
வேகத்தடைகளால் விபத்து
மதுரை மாவட்டம் மேலூரில் இருந்து சேக்கிபட்டி செல்லும் சாலையில் அதிகமான வேகத்தடைகள் உள்ளன. இதனால் வாகனங்களில் செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே, தேவையற்ற இடங்களில் உள்ள வேகத்தடைகளை அகற்ற வேண்டும்.
சேமராஜ், மேலூர்.