ஆத்மநாதசுவாமி கோவிலில் மார்கழி திருவாதிரை தேரோட்டம்

ஆவுடையார்கோவிலில் உள்ள ஆத்மநாதசுவாமி கோவிலில் மார்கழி திருவாதிரையையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.;

Update: 2021-12-18 18:38 GMT
ஆவுடையார்கோவில், 
ஆத்மநாதசுவாமி கோவில்
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில், திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஆத்மநாதசுவாமி கோவில் உள்ளது. தேவாரப்பாடல் பெற்ற ஆவுடையார் கோவில் மாணிக்கவாசகரால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆனித் திருமஞ்சனம் மற்றும் மார்கழி திருவாதிரையின்போது தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக திருவிழா நடைபெறவில்லை. தற்போது கொரோனா தொற்று குறைந்திருந்ததால் மார்கழி திருவாதிரை திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
தேரோட்டம்
இதையடுத்து, ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வாகனங்களில் மாணிக்கவாசகர் வீதி உலா வந்தார். விழாவின் சிகர நிகழ்ச்சியான திருவாதிரை திருவிழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி மாணிக்க வாசகருக்கு பால், பழம், மஞ்சள், விபூதி உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மாணிக்க வாசகர் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார்.
காலை 10.30 மணியளவில், முக்கிய பிரமுகர்கள் தேர்சக்கரத்தில் தேங்காய் உடைத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். அதனை தொடர்ந்து மேள, தாளங்கள் மற்றும் அதிர்வேட்டுகள் முழங்க திரளான பக்தர்கள் ஆத்மநாதா, மாணிக்க வாசகா என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
அன்னதானம்
தேர் நான்கு ரத வீதிகளிலும் உலா வந்தது. ஒவ்வொரு வீதியிலும், ஏராளமான பக்தர்கள் கூடி நின்று மாணிக்க வாசகருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின்னர் மதியம் 1.30 மணிக்கு தேர் நிலையை வந்தடைந்தது. பின்னர் சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தேரோட்டத்தையொட்டி ஆங்காங்கே பக்தர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. 
விழாவில் திருவாடுதுறை ஆதீன தென்மண்டல மேலாளர் முத்துகிருஷ்ணன், ஆதீனத்தின் சார்பில் தம்பிரான் சுவாமிகள், அறந்தாங்கி முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி, ராஜநாயகம் உள்பட பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
போலீஸ் பாதுகாப்பு
விழாவிற்கான ஏற்பாடுகளை ஆவுடையார்கோவில் ஆத்மநாதசுவாமி கோவில் தேவஸ்தான நிர்வாகிகள் செய்திருந்தனர். தேரோட்டத்தையொட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு தினேஷ்குமார், ஆவுடையார்கோவில் இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
20-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு சிவபெருமான், மாணிக்கவாசகருக்கு உபதேசம் செய்யும் காட்சி நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்