தடையை மீறி கிரிவலம் சென்ற பக்தர்கள்
திருவண்ணாமலையில் நேற்று தடையை மீறி ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் நேற்று தடையை மீறி ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பவுர்ணமி கிரிவலம்
பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது.
திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் பவுர்ணமி நாட்களில் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் மலை சுற்றும் பாதையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்திற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் கடந்த மாதம் நடைபெற்ற கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மகா தீபத்தன்று பொதுமக்கள் கிரிவலம் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
அதனை தொடர்ந்து இந்த மாதத்திற்கான பவுர்ணமிக்கு கிரிவலம் செல்ல அனுமதி அளிக்கப்படும் என்று பக்தர்கள் எதிர்ப்பார்த்து இருந்தனர்.
இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று காலை 8.15 மணிக்கு தொடங்கி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.22 மணிக்கு நிறைவடைகிறது.
போலீசார் கண்காணிப்பு
ஆனால் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக பவுர்ணமி கிரிவலத்திற்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தடை விதிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து நேற்று கிரிவலப்பாதையில் உள்ள முக்கிய சாலை சந்திப்பு பகுதிகளில் போலீசார் பேரிகார்டுகள் மூலம் தடுப்புகள் அமைத்து பக்தர்கள் கிரிவலப்பாதையில் செல்லாமல் இருக்க கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இருப்பினும் ஏராளமான பக்தர்கள் தனித்தனியாக தடையை மீறி மாற்றுப்பாதையில் கிரிவலப்பாதைக்கு வந்து தங்களது கிரிவலத்தை தொடர்ந்தனர்.
தடுப்புகள் அமைக்கப்பட்ட பகுதியில் கிரிவலப்பாதையில் உள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் தங்களது அடையாள அட்டையை போலீசாரிடம் காண்பித்து சென்றனர்.
மேலும் அருணாசலேஸ்வரர் கோவில் மட்டுமின்றி கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
தடையை மீறி பக்தர்கள் கிரிவலம் சென்றதால் திருவண்ணாமலையில் நேற்று பரபரப்பு நிலவியது.