மினிமாரத்தான் ஓட்டம்

75-வது சுதந்திர தின விழாவையொட்டி விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டத்தை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தார்.

Update: 2021-12-18 18:10 GMT
வேலூர்

இந்திய நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தின விழா அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. 

இதையொட்டி கடந்த 16 முதல் வருகிற 31-ந்தேதி வரை வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கலை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
 
ஒவ்வொரு துறை சார்பிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று விளையாட்டுத்துறை, பள்ளி கல்வித்துறை மற்றும் மாவட்ட விளையாட்டு சங்கங்கள் சார்பில் மினிமாரத்தான் ஓட்டம் நடந்தது.

வேலூர் கோட்டை காந்திசிலை முன்பு தொடங்கிய விழிப்புணர்வு மினிமாரத்தான் ஓட்டத்தை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆழிவாசன், தாசில்தார் செந்தில் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மினிமாரத்தான் ஓட்டம் மக்கான் சிக்னல், அண்ணாசாலை, பழைய மீன்மார்க்கெட், தெற்கு போலீஸ் நிலையம், திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வழியாக சென்று நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது. 

இதில், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பலர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்