மோட்டார் சைக்கிள்களை திருடிய 2 வாலிபர்கள் கைது

வேலூர் மற்றும் சுற்று வட்டாரக் பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-12-18 18:10 GMT
வேலூர்

வேலூர் மற்றும் சுற்று வட்டாரக் பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். 

மோட்டார்சைக்கிள்கள் திருட்டு

வேலூர் அரசமரப்பேட்டையைச் சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 39), டிபன் கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த மாதம் கொசப்பேட்டையில் உள்ள நண்பர் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த மோட்டார்சைக்கிள் திருட்டு போனது. 

இதுகுறித்து லட்சுமணன் வேலூர் தெற்குக் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் தெற்குக் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சியாமளா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன் மற்றும் போலீசார் நேற்று வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். 

அப்போது அந்த வழியாக 2 பேர் வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி அவற்றின் ஆவணங்களை போலீசார் சோதனைச் செய்தனர். அதில், அந்த மோட்டார்சைக்கிள் கடந்த மாதம் திருட்டுப்போன லட்சுமணனுக்கு சொந்தமானது எனத் தெரிய வந்தது.

2 பேர் கைது

இதையடுத்து 2 பேரையும் பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில், அவர்கள் வேலூரை அடுத்த கருகம்பத்தூரை சேர்ந்த அப்துல்ஹாஜி (வயது 26), ஜாவித் (22) என்பதும், இருவரும் சேர்ந்து வேலூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் வீடு, வணிக வளாகம், கடைகளின் முன்பு நிறுத்தி வைத்திருந்த பல மோட்டார் சைக்கிள்களை திருடி அதன் உதிரிப்பாகங்களை மாற்றி பல நபரிடம் விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்கள் வீட்டின் அருகே பதுக்கி வைத்திருந்த 13 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்