திருக்கோவிலூர் அருகே பரிதாபம் 1 வயது மகள் இறந்ததால் நர்சு தற்கொலை

திருக்கோவிலூர் அருகே ஒரு வயது மகள் இறந்ததால் நர்சு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்

Update: 2021-12-18 17:00 GMT
திருக்கோவிலூர்

காதல் திருமணம்

திருக்கோவிலூரை அடுத்த மணலூர்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வினோத்குமார். இவரும், ஆஷா(வயது 26) என்பரும் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 
வினோத்குமார், திருப்பூரில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வருகிறார். ஆஷா, மணலூர்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு கவியாழினி என்ற ஒரு வயது பெண் குழந்தை இருந்தது. 

உடல்நலக்குறைவு

இந்த நிலையில் கவியாழினிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவளை, தான் வேலை பார்த்து வந்த தனியார் ஆஸ்பத்திரியிலேயே ஆஷா சிகிச்சை அளித்து வந்தார். ஆனால் குழந்தையின் உடலில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதுபற்றி வினோத் குமாருக்கு தகவல் தெரிவித்த ஆஷா, அவரை உடனடியாக ஊருக்கு புறப்பட்டு வரும்படி கூறினார். ஆனால் வினோத்குமார் வரவில்லை. 
இந்த நிலையில் குழந்தை கவியாழினியின் உடல் நிலை மேலும் மோசமானது. ஒருபுறம் தான் பெற்ற குழந்தை உயிருக்கு போராடிக் கொண்டிந்ததையும், மறுபுறம் குழந்தையை பார்க்க கணவர் வராததையும் நினைத்து ஆஷா மனமுடைந்து காணப்பட்டார்.

தற்கொலை

இந்த நிலையில் ஆஷா வீட்டின் கதவு நேற்று காலை வெகுநேரமாகியும் திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை திறந்து பார்த்தபோது மின் விசிறியில் ஆஷா தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்தார். கீழே கவியாழினி இறந்து கிடந்தாள். 
இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மணலூர்பேட்டை போலீசார் விரைந்து சென்று தாய்-மகள் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிதே பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

காரணம் என்ன?

உடல் நலக்குறைவால் குழந்தை இறந்திருக்கலாம் எனவும், அதனால் மனமுடைந்து ஆஷா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும்    போலீசார் சந்தேகிக்கிறார்கள். இருப்பினும் இந்த சம்பவம்  தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்