பழையாறு துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

கடல் சீற்றம் காரணமாக பழையாறு துறைமுகத்தில் இருந்து 5-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

Update: 2021-12-18 16:43 GMT
கொள்ளிடம்:
கடல் சீற்றம் காரணமாக பழையாறு துறைமுகத்தில் இருந்து 5-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தின் மூலம் தினந்தோறும் 300 விசைப்படகுகள், 300 பைபர் படகுகள் மற்றும் 250 நாட்டு படகுகள் மூலம் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்று வருகின்றனர். கடல் சீற்றமாக காணப்படுவதால் 5 ஆயிரம் மீனவர்கள் நேற்று 5-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை.
மேலும் துறைமுக வளாகத்தில் மீன்களை தரம் பிரித்தல், விற்பனை செய்தல், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு மீன்களை விற்பனைக்கு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபடுதல், கருவாடு உலர வைத்தல், ஐஸ்கட்டி தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வரும் சுற்றுவட்டார கிராமங்களை  சேர்ந்த 2 ஆயிரம் தொழிலாளர்களும் பணிக்கு செல்லவில்லை. தொடர்ந்து கடந்த 5 நாட்களாக கடல் கொந்தளிப்பாக இருந்து வருகிறது.
மணல் திட்டுக்கள்
இதுகுறித்து அந்த பகுதி மீனவர்கள் கூறுகையில், கொள்ளிடம் ஆறு கடலில் கலக்கும் இடத்தில் பழையாறு துறைமுகம் அமைந்துள்ளது. கடல் சீற்றம் காரணமாகவும்.வடகிழக்கு பருவமழையினால் கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் கடல் பகுதியில் மணல் குவியல் அதிகரித்துள்ளது. இதனால் முகத்துவாரம் தூர்ந்து போய் உள்ளது. இதனால் விசைப்படகுகள் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மணல் திட்டுகளை அகற்றினால்தான் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியும். எனவே மீனவர்கள் நலன் கருதி முகப்பு துவாரத்தில் உள்ள மணல் திட்டுக்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
திருக்கடையூர்
இதேபோல திருக்கடையூர் அருகே சின்னமேடு, சின்னங்குடி, தாழம்பேட்டை உள்ளிட்ட மீனவ கிராமங்களில் விசைப்படகு மற்றும் பைபர் படகில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த மாதம் பெய்த கன மழையை தொடர்ந்து கடல் சீற்றமாக காணப்பட்டு வருகிறது. 
இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். தொடர்ந்து கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுவதால் 2 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் 500-க்கும் மேற்பட்ட படகுகளை மீனவர்கள் பாதுகாப்பாக கடற்கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்