வக்கீல்கள் ஒன்றிணைந்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டும்; ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பேச்சு

வக்கீல்கள் ஒன்றிணைந்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்று ஒட்டன்சத்திரத்தில் நடந்த சப்-கோர்ட்டு திறப்பு விழாவில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனிஸ்வர்நாத் பண்டாரி தெரிவித்தார்.

Update: 2021-12-18 16:39 GMT
ஒட்டன்சத்திரம்:
வக்கீல்கள் ஒன்றிணைந்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்று ஒட்டன்சத்திரத்தில் நடந்த சப்-கோர்ட்டு திறப்பு விழாவில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனிஸ்வர்நாத் பண்டாரி தெரிவித்தார்.
சப்-கோர்ட்டு திறப்பு

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் சப்-கோர்ட்டு அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி (பொறுப்பு) முனிஸ்வர்நாத் பண்டாரி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, ரிப்பன் வெட்டி கோர்ட்டை  திறந்து வைத்தார். பின்னர் அவர் குத்துவிளக்கு ஏற்றினார்.
இதில், ஐகோர்ட்டு நீதிபதிகள் வி.எம்.வேலுமணி, வி.பார்த்திபன், எம். நிர்மல்குமார், ஆர்.என். மஞ்சுளா, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் ஊழல் தடுப்பு துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, மாவட்ட  நீதிபதி எம்.கே.ஜமுனா, மாவட்ட கலெக்டர் எஸ்.விசாகன், தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு ஜே.மோகனா, போலீஸ் சூப்பிரண்டு வி.ஆர்.சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு, குத்துவிளக்கு ஏற்றினர். விழாவில் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனிஸ்வர்நாத் பண்டாரி பேசியதாவது:-  
மக்களுக்கு சேவை
ஒட்டன்சத்திரத்தில் ஏற்கனவே உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் மற்றும் நடுவர் நீதிமன்றம் செயல்பட்டு வருகின்றன. தற்போது சப்-கோர்ட்டு தொடங்கப்பட்டுள்ளது. இங்கு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கான இடத்தை கலெக்டர் மற்றும் மாவட்ட நீதிபதி ஆகியோர் தேர்வு செய்து அதற்கான பரிந்துரைகளை ஐகோர்ட்டுக்கு அனுப்பி வைத்தால், அதுதொடர்பாக தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். அமைச்சர்களும் இங்கு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து மக்களுக்கும் விரைந்து நீதி கிடைக்க தேவையான இடங்களில் நீதிமன்றங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம் வழக்குகளை விரைந்து முடித்து, தாமதமின்றி நீதி கிடைக்க வழிவகை ஏற்படும். வக்கீல்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு பொதுமக்களுக்கு நீதி கிடைக்க சேவையாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நீதித்துறைக்கு முன்னுரிமை
அமைச்சர் ரகுபதி பேசும்போது, அனைத்து மக்களுக்கும் விரைவாக நீதி கிடைக்க வேண்டும் என்பது அரசியலமைப்பு சட்டத்தின் முதன்மையான குறிக்கோள்களில் ஒன்றாகும். தாமதிக்கப்பட்ட நீதி என்பது மறுக்கப்பட்ட நீதிக்கு சமமாகும். நீதி தாமதமாக கூடாது என்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நீதித்துறைக்கு முன்னுரிமை அளித்து தேவையான கட்டிட வசதி, மனித ஆற்றல், கணினி மயமாக்குதல் போன்ற கட்டமைப்புகளை நிறைவேற்றி வருகிறார். அந்த வகையில் தற்போது ஒட்டன்சத்திரத்தில் சப்-கோர்ட்டு தொடங்கப்பட்டுள்ளது என்றார்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் அர.சக்கரபாணி பேசுகையில், ஒட்டன்சத்திரம் தொகுதி பொதுமக்கள் பழனி சப்-கோர்ட்டை அணுக வேண்டி இருந்தால், அவர்களுக்கு கால விரயமும், பயண செலவும் ஏற்பட்டது. இதனால் ஒட்டன்சத்திரத்தில் சப்-கோர்ட்டு அமைக்கப்பட வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. தற்போது அந்த கோரிக்கை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார்.
இந்த விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மாவட்ட வன அலுவலர் பிரபு, பழனி ஆர்.டி.ஓ. ஆனந்தி, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் பொன்ராஜ், ஒட்டன்சத்திரம் வக்கீல்கள் சங்க தலைவர் பொன்னுசாமி, செயலாளர் முத்துக்குமார், ஒட்டன்சத்திரம் பார் அசோசியேஷன் தலைவர் பெருமாள், செயலாளர் முருகானந்தம், ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டுகள், அலுவலர்கள், வக்கீல்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்