தர்மபுரியில் முன்னாள் அமைச்சர் உள்பட 1450 அதிமுகவினர் மீது வழக்கு

தர்மபுரியில் முன்னாள் அமைச்சர் உள்பட 1450 அதிமுகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2021-12-18 16:32 GMT
தர்மபுரி:
தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமையில் தர்மபுரி நகராட்சி அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்தும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினார்கள். இந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர் சாக்கப்பன் தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். 
அதில் கொரோனா தொற்று விதிகளை மீறி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூட்டமாக திரண்டு சமூக இடைவெளி இல்லாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும், அதில் பங்கேற்ற கோவிந்தசாமி எம்.எல்.ஏ. தமிழக அரசை அவதூறாக பேசியதாகவும் தெரிவித்துள்ளார். அதன்பேரில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், அ.தி.மு.க.வினர் 1,450 பேர் மீது தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்