திண்டுக்கல்லில் தண்ணீர் கேட்டு மாநகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
திண்டுக்கல்லில் தண்ணீர் கேட்டு மாநகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல்-பழனி சாலையில் லாரிபேட்டை அருகே உள்ள சின்னஅய்யன்குளம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று, திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் தங்கள் பகுதியில் தண்ணீர் வசதி செய்து தரும்படி கேட்டு மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து அதிகாரிகள் விரைந்து வந்து பொதுமக்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள் கூறுகையில், சின்னஅய்யன்குளத்தில் 200 குடும்பத்தினர் வசிக்கிறோம். அங்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆழ்துளை கிணறு அமைத்து மோட்டார் பொருத்தினர். ஆனால் தண்ணீர் தொட்டி வைக்கவில்லை. இதற்கிடையே மோட்டார் பழுதாகி 2 மாதங்களுக்கு மேலாகி விட்டது. இதுவரை அதை சரிசெய்யவில்லை. இதனால் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம். எனவே பழுதான மோட்டாரை சரிசெய்து மீண்டும் பொருத்த வேண்டும். மேலும் தண்ணீர் பிடிப்பதற்கு வசதியாக தொட்டி அமைக்க வேண்டும். அதேபோல் சாலை, சாக்கடை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் செய்து தரவேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.