திருப்பூரில் தனியார் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் ஓரிரு நாளில் கைது

திருப்பூரில் தனியார் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் ஓரிரு நாளில் கைது

Update: 2021-12-18 16:27 GMT
அனுப்பர்பாளையம்,:
திருப்பூரில் தனியார் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் ஓரிரு நாளில் கைது செய்யப்படுவார் என மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா கூறினார்.
பாலியல் சீண்டல்
திருப்பூர் பூலுவப்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படிக்கும் 5 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக  திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர்  போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.  இந்த விவகாரத்தில்  நேர்மையாக விசாரணை நடத்தக்கோரி மாதர் சங்கத்தினர் பள்ளி முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மாணவர்களின் பெற்றோர், பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டோர்  சாலைமறியலில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணிக்கு மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் பின்னரே பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 
விரைவில் குற்றவாளி கைது
பின்னர் போலீஸ் கமிஷனர் வனிதா நிருபர்களிடம் கூறும்போது “
இது தொடர்பாக பள்ளியில் உள்ள அனைத்து கண்காணிப்பு கேமிராக்களில் கடந்த 3 நாட்களாக பதிவான காட்சிகளை பார்வையிட்டு, விசாரணை நடத்தி வருகிறோம். 
குழந்தையின் மருத்துவ பரிசோதனை அறிக்கையில் பாலியல் தொந்தரவு செய்ததாக குழந்தையின் உடலில் எந்த காயமும் உள்புறமோ, வெளிப்புறமோ இல்லை என்று வந்துள்ளது. ஆனாலும் குழந்தைக்கு பாலியல் புகார் என்பதால் அதிக கவனம் செலுத்தி வருகிறோம்.  ஓரிரு நாட்களில் குற்றவாளி கைது செய்யப்படுவார்” என்றார். 
போலீஸ் கமிஷனரிடம் புகார்
இந்த பிரச்சினையை தொடர்ந்து சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் பள்ளியின் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் திருப்பூர் மாவட்டக்குழு சார்பில் நேற்று மாநகர போலீஸ் கமிஷனர் வனிதாவை சந்தித்து புகார் மனு கொடுத்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
 5 வயது மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும். இதுபோன்ற பாலியல் தொந்தரவு வன்முறை சம்பவங்கள் நடப்பதற்கு போதை பொருட்கள் தங்கு தடையின்றி விற்பனை செய்வதே காரணமாக அமைந்துள்ளது. 
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
பெண் பாதுகாப்புக்குழு விசாரணை
இந்த சம்பவம் தொடர்பாக பெண்கள் பாதுகாப்புக்குழு சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிக்கு சென்று நேற்று விசாரணை மேற்கொண்டது. அரசு பள்ளிகளை சேர்ந்த 4 தலைமை ஆசிரியைகள் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் சென்று பள்ளியில் உள்ள ஊழியர்கள், ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதுகுறித்து முதன்மை கல்வி அதிகாரி ரமேஷ் கூறும்போது, பெண்கள் பாதுகாப்புக்குழுவில் உள்ள 4 பள்ளி தலைமை ஆசிரியரியைகள் பள்ளியில் விசாரணையை தொடங்கியுள்ளனர். அவர்கள் அளிக்கும் அறிக்கையை பொறுத்து மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் செய்திகள்