2024-ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மோடியின் தோல்வி முகம் தொடங்கி விட்டது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேச்சு

2024 ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மோடியின் தோல்வி முகம் தொடங்கி விட்டது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசினார்.

Update: 2021-12-18 16:18 GMT

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 23-வது மாவட்ட மாநாடு விழுப்புரத்தில் நேற்று நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோதண்டம் மாநாட்டு செங்கொடியை ஏற்றிவைத்தார்.

 செயற்குழு உறுப்பினர் அறிவழகன், அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். வரவேற்புக்குழு செயலாளர் கண்ணப்பன் அனைவரையும் வரவேற்றார்.
மாநாட்டை கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

மோசமான நிலைமை

தமிழகத்தில் பா.ஜ.க., ரவுடியிசத்தை கட்டவிழ்த்து விட்டு வருகிறது, ஒரு பக்கம் மோடி ஒட்டுமொத்தமாக தேசத்தை விற்றுக்கொண்டிருக்கிறார். 
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் எல்லாம் தனியார் கார்ப்பரேட்களுக்கு எப்போது வேண்டுமானாலும் விற்றுவிடுவார்கள்.

 ஏற்கனவே விமானங்களும், ரெயில் நிலையங்களும் தனியாருக்கு விற்கப்பட்டு விட்டன. ஏன் விழுப்புரம் ரெயில் நிலையம் அம்பானி ரெயில் நிலையமாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இது குறித்தெல்லாம் நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்டால் பதில் சொல்ல மாட்டார்கள். 

எங்களுக்கு பெரும்பான்மை இருக்கிறது உங்களுக்கு கேள்வி கேட்க என்ன உரிமை இருக்கிறது என்று கேட்கிறார்கள். அப்படிப்பட்ட மோசமான நிலைமை இன்று நாட்டில் ஏற்பட்டிருப்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

தோல்வி முகம்

3 வேளாண் சட்டங்களை மோடி அரசை திரும்ப பெற வைத்து, விவசாய இயக்கங்கள்  புதிய வரலாற்றை படைத்துள்ளது. இதன் மூலம் 2024-ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மோடியின் தோல்வி முகம் தொடங்கி விட்டது. 

தமிழ்நாட்டில் தாமரை மலரும் என்றார்கள், ஆனால் தாமரை மலரவில்லை, கருகி கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் அ.தி.மு.க. என்ற பெரிய கட்சியையும், பா.ம.க.வையும் வைத்துக்கொண்டு எப்படியாவது தனது நாடகத்தை அரங்கேற்றிவிட பா.ஜ.க. துடித்துக் கொண்டிருக்கிறது. அதனால் மதசார்பற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஒற்றுமையை பாதுகாக்கும் கடமை நமக்கு இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

மாநாட்டில் மாநில செயற்குழு உறுப்பினர் நூர்முகமது, முன்னாள் எம்.எல்.ஏ. ராமமூர்த்தி, மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முத்துக்குமரன், ராதாகிருஷ்ணன், கீதா, சங்கரன், மூர்த்தி, ராஜேந்திரன், வேல்மாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இருந்து மாநாடு நடக்கும் இடத்திற்கு செங்கொடி ஏந்தியவாறு பேரணியாக சென்றனர். தொடர்ந்து, இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) 2-ம் நாள் மாநாடு நடைபெற உள்ளது.

மேலும் செய்திகள்