ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமையும் இடத்தை கலெக்டர் ஆய்வு
ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைய உள்ள இடத்தை கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார். அப்போது அங்கு நடந்த அகழாய்வு பணிகளையும் அவர் பார்வையிட்டார்.;
ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைய உள்ள இடத்தை கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார். அப்போது அங்கு நடந்த அகழாய்வு பணிகளையும் அவர் பார்வையிட்டார்.
அகழாய்வு பணிகள்
ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் 17 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த அக்டோபர் மாதம் 10-ந் தேதி தொல்லியல் அகழாய்வு பணிகள் தொடங்கியது. தொடர்ந்து 2 மாதங்களுக்கும் மேலாக இப்பணிகள் நடந்து வருகிறது.அகழாய்வு பணியில் 12 முதுமக்கள் தாழிகள், சங்க காலத்தில் மக்கள் வாழ்ந்ததற்காக வாழ்விடப்பகுதிகள், 3500 ஆண்டுகள் முதல் 150 ஆண்டுகள் வரை ஆதிச்சநல்லூரில் மனிதர்கள் வாழ்ந்துள்ளதை உறுதிப்படுத்தும் விதமாக ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட சுண்ணாம்பு தளம் கண்டுபிடிக்கப்பட்டது.
கலெக்டர் பார்வையிட்டார்
இதற்கிடையே ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவித்திருந்த நிலையில் அருங்காட்சியகம் அமைய உள்ள ஆதிச்சநல்லூர் பகுதியை கலெக்டர் செந்தில்ராஜ் பார்வையிட்டார்.மத்திய தொல்லியல் துறை அதிகாரிகளிடம் இடங்கள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் நடந்து வரும் அகழாய்வு பணிகளை பார்வையிட்டு, பணிகள் குறித்து கேட்டறிந்தார். அவருக்கு மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குனர் அருண்ராஜ், ஆய்வுகள் குறித்து விளக்கமளித்தார்.
ஆய்வாளர்கள் எத்திஸ்குமார், முத்துகுமார், ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ராதாகிருஷ்ணன், ஆதிச்சநல்லூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சங்கர் கணேஷ் உள்பட வருவாய்த்துறையினர் மற்றும் அதிகாரிகள் உடன் வந்தனர்.