உலகத் தமிழ் பண்பாட்டு மையம் சார்பில் தமிழறிஞர்கள், எழுத்தாளர்களுக்கு விருது
உலகத் தமிழ் பண்பாட்டு மையம் சார்பில் தமிழறிஞர்கள், எழுத்தாளர்களுக்கு விருது
கோவை
உலகத் தமிழ் பண்பாட்டு மையம் சார்பில் தமிழறிஞர்கள், எழுத்தாளர்களுக்கு விருதுகளை விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை வழங்கினார்.
உலகத் தமிழ் பண்பாட்டு மையம்
உலகத் தமிழ் பண்பாட்டு மையம் சார்பில் தமிழறிஞர்களுக்கு விருது வழங்கும் விழா மற்றும் புத்தக வெளியீட்டு விழா கோவை காளப்பட்டியில் உள்ள டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரியில் நேற்று நடைபெற்றது.
விழாவிற்கு கல்லூரி செயலாளர் டாக்டர் தவமணிதேவி பழனிசாமி முன்னிலை வகித்தார். இதில் தாய் - சேய்க்கான சத்தான உணவுகள், இளைஞர்களுக்கான வாழ்க்கை திறன்கள், தமிழோசை (மாணவர் இதழ்) ஆகிய புத்தகங்களை உலகத் தமிழ் பண்பாட்டு நிறுவன தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி தலைமை தாங்கி வெளியிட்டார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
சமூகத்தின் அடையாளமாகவும், பெருமையாகவும் மொழி விளங்கு கிறது. உங்கள் மொழி பெருமையை உணரா விட்டால் அடையாளத் தை இழக்க நேரிடும். எனவே மொழியை நினைத்து பெருமை கொள்ள வேண்டும். தாழ்வு எண்ணங்கள் வரக்கூடாது. தமிழ் மொழியின் பெருமை காக்கவே உலகத் தமிழ் பண்பாட்டு மையம் தொடங்கப்பட் டது. இதன் மூலம் நல்ல கவிஞர்கள், எழுத்தாளர்கள் பாராட்டப்பட்டு விருதுகள் வழங்கப்படுகிறது. நீங்கள் உங்களது குழந்தைகளுக்கு தற் காலத்திற்கு ஏற்ப முன்னோர்களின் பெயரையும் சேர்த்து வைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தமிழறிஞர்களுக்கு விருதுகள்
விழாவில் தமிழறிஞர்கள் சுந்தரமூர்த்திக்கு உ.வே.சா. தமிழறிஞர் விருது, பாலுசாமிக்கு டாக்டர் நல்ல பழனிசாமி பிறதுறை தமிழ்த்தொண்டர் விருது, பாலமுருகனுக்கு பெரியசாமி தூரன் தமிழ் படைப்பாளர் விருது, மற்றும் எழுத்தாளர்கள் அருளி, சூர்யகாந்தன், தமிழ்மகன் ஆகியோருக்கு விருது மற்றும் ரொக்கப் பரிசுகளை இஸ்ரோ முன்னாள் இயக்குனரும், மூத்த விஞ்ஞானியுமான மயில்சாமி அண்ணாதுரை வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
படிக்காத சிந்தனை ஆபத்தானது. சிந்தித்து படிக்காமல் இருப்பதும், வீண் என்பதை மாணவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். காலத்தின் உணர்வுகளை கவிஞர்களின் எழுத்துகள் பிரதிபலிக்கிறது. மனிதன், மனிதனாக வாழ இலக்கியம் அவசியம். உலகத்தில் உள்ள மற்ற மொழிகளை விட தமிழ் மொழி அதிக இலக்கியங்களை கொடுத்து உள்ளது. நல்ல புத்தகங்களை தேர்வு செய்து மாணவர்கள் படிக்க வேண்டும். படிக்க, படிக்க எழுத தூண்டும், எழுதினால் தான் இலக்கிய ஆற்றல் வளரும்.
தொடர்ந்து இயங்க வேண்டும்
நான் பிறந்து வளர்ந்த போது தினமும் கோதவாடி குளத்தில் குளித்து மகிழ்ந்தேன். ஆனால் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோதவாடி குளம் தண்ணீர் இன்றி காணப்பட்டது. நிலவில் தண்ணீர் கண்டுபிடித்த என்னால் கோதவாடி குளத்தில் தண்ணீர் கொண்டு வரமுடியவில்லை. இந்த உயிர் வலிகளை எழுத்துகளாக மாற்றி சம்பந்தப்பட்டவர்களிடம் சமர்ப்பித்தேன். தற்போது இந்த குளம் நிரம்பியது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், ஒரு வெற்றியை பாராட்டிய உடனே, அடுத்து என்ன செய்ய போகிறீர்கள் என்று கேட்பார். அதே போன்று உங்கள் வாழ்வில் ஒரு லட்சியத்தை அடைந்ததும், அடுத்து என்ன என்று தொடர்ந்து இயங்க வேண்டும். உலக அளவில் இந்தியா விண்வெளி துறையில் முதல் 5 இடங்களில் உள்ளது. நீங்கள் தமிழை சரியாக புரிந்து கொண்டால், நீங்களும் சரியாக பயன்படுத்தி கொண்டால், தமிழ் உங்களை கைவிடாது.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் சிற்பி பாலசுப்பிரமணியம், டாக்டர் சதாசிவம், முத்துசாமி, சுப்பிரமணியம், பாலமுருகன், பாலுசாமி, முத்துசாமி மற்றும் பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.