கோவை
"உங்கள் துறையில் முதல் - அமைச்சர்" திட்டத்தின் கீழ் நடந்த குறை தீர்ப்பு முகாமில் தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபுவிடம் 843 போலீசார் மனு அளித்தனர்.
குறைதீர்ப்பு முகாம்
உங்கள் துறையில் முதல்- அமைச்சர் திட்டத்தில் போலீசாருக்கான குறை தீர்ப்பு முகாம் கோவை அவினாசி ரோட்டில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபுவிடம், தங்களின் குறைகள், இடமாறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை அடங்கிய மனுக்களை போலீசார் அளித்தனர்.
இதில், மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய 8 மாவட்டங்களை சேர்ந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் முதல் போலீஸ்காரர்கள் வரை 843 பேர் மனு அளித்தனர்.
முகாமில் மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர், மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப்குமார், டி.ஐ.ஜி. முத்துசாமி, கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இது குறித்து தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
போலீசார் மனு
உங்கள் துறையில் முதல் - அமைச்சர் திட்டத்தின் கீழ் குறை தீர்ப்பு முகாம்கள் நடத்தி போலீசாரின் குறைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன. 38 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் 7 மாநகர கமிஷனர் அலுவலகங்களில், காவல் துணை கமிஷனர்களால் 5,236 மனுக்கள் பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டு உள்ளன. அவர்களால் தீர்க்கப்படாத மனுக்கள் 11 சரக டி.ஐ.ஜி., மற்றும் மாநகர கமிஷனர்களால் பரிசீலிக்கப்பட்டன. அதிலும் தீர்க்கப்படாத மனுக்கள் ஐ.ஜி.க்கள் மூலம் தீர்க்கப்பட்டன.
வடக்கு மண்டல போலீசாரிடம் 300 மனுக்களும், சென்னை மாநகர போலீசாரிடம் 748 மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மத்திய மண்டலம் போலீசாரிடம் 600 மனுக்களும், தெற்கு மண்டலத்தில் 916 மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
தண்டனை குறைப்பு
தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று மேற்கு மண்டலம், கோவை மாநகரம், திருப்பூர் மாநகரம் மற்றும் சேலம், மாநகர காவலர்களின் குறைகளை கேட்டறிந்தார். அவரிடம் கொடுக்கப்பட்ட 843 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
தமிழக டி.ஜி.பி. அலுவலகத்தில் கடந்த ஜூலை முதல் நவம்பர் வரை போலீசார் மற்றும் அலுவலர்களிடம் நேரடியாக 1,340 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 1,058 கருணை மனுக்களில் 366 மனுக்கள் மீது தண்டனை ரத்து செய்யப்பட்டிருக்கிறது. 51 பேர் பணிக்கு திரும்ப எடுக்கப்பட்டு இருக்கிறார்கள். 164 பேரின் தண்டனை குறைக்கப்பட்டு இருக்கிறது.
1353 பேருக்கு இடமாற்றம்
உங்கள் துறையில் முதல்- அமைச்சர் திட்டத்தின் கீழ் மாவட்ட மண்டல அளவில் போலீசாரிடம் பெறப்பட்ட மனுக்களை டி.ஜி.பி. பரிசீலனை செய்து 1353 போலீசாருக்கு அவர்களின் சொந்த மாவட்டங் களுக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டது. டி.ஜி.பி. மூலம் தீர்வு காணப் படாத மனுக்கள் முதல்- அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.