அடிக்கடி விபத்து
பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு தினமும் அதிகமான தனியார் மற்றும் அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில் பல பஸ்கள் அதிக பயணிகளை ஏற்றி செல்வதை கருத்தில் கொண்டு அரசு நிர்ணயம் செய்த வேகத்தை விட மிகவேகமாக இயக்கப்படுகிறது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. பயணிகள் நலன் கருதி வேகமாக இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பஸ்களை அதிகாரிகள் ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட டிரைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
.
பழனிசாமி, பொள்ளாச்சி.
நிலைதடுமாறும் இருசக்கர வாகன ஓட்டிகள்
கோவை ராமநாதபுரம் 80 அடி ரோட்டில் ஏராளமான வேகத்தடை உள்ளது. இந்த வேகத்தடை இருப்பது வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. இதனால் அந்த வழியாக இருச்கர வாகனங்களில் வருபவர்கள் நிலை தடுமாறுகிறார்கள். மேலும் விபத்துகளும் நடந்த வண்ணம் உள்ளது. அதனால் வேகத்தடைகளில் ஒளிரும் ஸ்டிக்கர் அல்லது வெள்ளை நிற வர்ணம் பூச சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
மோனிஷா, கோவை.
நோயாளிகள் அவதி
பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியிக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவிற்கு செல்லும் வழியில் நோயாளிகளின் உறவினர்கள் அமர இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அந்த பகுதியில் வாகனங்களை நிறுத்துவதால் பொதுமக்கள், நோயாளிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே வாகனங்களை நிறுத்துவதற்கு தனி இடம் ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமார், பொள்ளாச்சி.
வேகத்தடை அமைக்கப்படுமா?
பொள்ளாச்சி உழவர் சந்தையில் இருந்து மார்க்கெட் ரோட்டிற்கு செல்லும் சாலையில் கல்வி மாவட்ட அலுவலக சந்திப்பில் சாலை வளைவாக உள்ளது. இந்த பகுதியில் வாகனங்கள் வேகமாக வருவதால் விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும் பாதாள சாக்கடைக்கு அமைக்கப்பட்ட ஆள்இறங்கு குழியும் சேதமாகி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே விபத்துகளை தடுக்க வளைவான பகுதியில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரகாஷ், ஜமீன்ஊத்துக்குளி.
தினத்தந்தி செய்தி எதிரொலி
விபத்தை தடுக்க இரும்பு தடுப்புகள்
கோவைப்புதூர் ஆஸ்ரம் பள்ளி சந்திப்பு அருகே அடிக்கடி விபத்து நடைபெற்று வந்தது. இந்த பகுதியில் இரும்பு தடுப்பு அல்லது வேகத்தடை அமைக்க போக்குவரத்து போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தினத்தந்தி புகார் பெட்டியில் சுட்டிக்காண்பிக்கப்பட்டது. இந்தநிலையில் விபத்துகளை தடுக்க அந்த பகுதியில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் குறைந்து உள்ளது.
கண்ணபிரான், கோவைப்புதூர்.
நிழற்குடை அமைக்கப்படுமா?
கோவை- திருச்சி ரோட்டில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சுங்கம் முதல் பங்குச்சந்தை கட்டிடம் வரை உள்ள நிழற்குடைகள் அகற்றப்பட்டன. தற்போது மேம்பாலம் கட்டும் பணி நிறைவடைந்து வர்ணம் தீட்டும் பணி நடக்கிறது. எனவே அகற்றப்பட்ட நிழற்குடைகளை மீண்டும் அமைக்க வேண்டும். நிழற்குடை இல்லாததால் பயணிகள் மழையில் நனைய வேண்டிய நிலை உள்ளது.
சக்திவேல், புலியகுளம்.
ஆக்கிரமிப்பு கடைகள்
கோத்தகிரி மார்கெட் திடல் எதிரே உள்ள நடைபாதை மற்றும் மேம்பாலத்திற்கு கீழே ஏராளமான கடைகள் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளன. இதனால் பொதுமக்கள் சாலையில் நடக்க வேண்டிய நிலை உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பேரூராட்சி நிர்வாகம் பொதுமக்கள் நலன் கருதி ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செந்தாமரை கண்ணன், கோத்தகிரி.
கால்வாய்களில் அடைப்பு
கோத்தகிரி கிளப் ரோடு பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் அமைந்து உள்ளன. இங்கு சாலையோரத்தில் அமைந்துள்ள கால்வாய்களில் இருந்து தாழ்வான பகுதியில் உள்ள இந்த குடியிருப்புகள் வழியாக மழைநீர் சென்று வருகிறது. தற்போது கால்வாய்களில் அடைப்புகள் ஏற்பட்டு உள்ளதால் குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்து வருவதால் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே நெடுஞ்சாலைத்துறையினர் கால்வாய் அடைப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுபாஷ், கோத்தகிரி.
பள்ளம் மூடப்படுமா?
கோவை பாப்பநாயக்கன்பாளையம் நேதாஜி ரோட்டில் சாலையின் நடுவே பாதாள சாக்கடை அடைப்பு காரணமாக தோண்டப்பட்ட பள்ளம் சரிவர மூடப்படவில்லை. வாகன ஓட்டிகள் அதில் சிக்கி விபத்துக்குள்ளாகாமல் இருக்க அந்த பள்ளத்தில் மரக்கிளை ஒன்றை நட்டு வைத்து உள்ளனர். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து சாலையின் நடுவே உள்ள பள்ளத்தை மூட வேண்டும்.
ரோகிணி, பாப்பநாயக்கன்பாளையம்.
குண்டும், குழியுமான சாலை
கோவை தடாகம் சாலையில் இருந்து முத்தண்ணன் குளக்கரை வரை செல்லும் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனேவ அந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வடிவேல், கோவை.
குடிநீர் தட்டுப்பாடு
சூளேஸ்வரன்பட்டியில் 13 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே 4 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மஜீத், சூளேஸ்வரன்பட்டி.