21 பள்ளிகளில் பயனற்ற கட்டிடங்களை இடிக்க நடவடிக்கை
நீலகிரி மாவட்டத்தில் 21 பள்ளிகளில் பயனற்ற கட்டிடங்களை இடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எஸ்.பி.அம்ரித் கூறினார்.
கூடலூர்
நீலகிரி மாவட்டத்தில் 21 பள்ளிகளில் பயனற்ற கட்டிடங்களை இடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எஸ்.பி.அம்ரித் கூறினார்.
உரிமைகள் தின விழா
நீலகிரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் கூடலூர் முஸ்லிம் அனாதை இல்ல மேல்நிலைப்பள்ளியில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கலெக்டர் எஸ்.பி.அம்ரித் கலந்துகொண்டு பேசினார்.
தொடர்ந்து விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு ரூ.25 ஆயிரத்துக்கான காசோலை, 4 பயனாளிகளுக்கு தலா ரூ.5,500 கல்வி உதவித்தொகை, இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை 3 பயனாளிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்கினார். தொடர்ந்து நீலகிரி மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்திற்கு நன்கொடையாக ரூ.1.85 லட்சத்துக்கு காசோலைகளை பல்வேறு முஸ்லிம் அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கலெக்டர் வழங்கினார்.
பயனற்ற கட்டிடங்கள்
இதில் கூடலூர் ஆர்.டி.ஓ. சரவண கண்ணன், தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அதன்பின்னர் நிருபர்களுக்கு கலெக்டர் எஸ்.பி.அம்ரித் பேட்டி அளித்தபோது கூறும்போது, நெல்லையில் பள்ளி சுவர் இடிந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து மாநிலம் முழுவதும் பள்ளி கட்டிடங்களின் தரம் குறித்து ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது. நீலகிரியில் 21 பள்ளிகளில் பயனற்ற கட்டிடங்கள் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. அதனை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.