அரசு கொடுத்த காலக்கெடுவுக்குள் விசாரணையை முடிக்க நடவடிக்கை- ஒருநபர் ஆணைய வக்கீல் பேட்டி
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான விசாரணையை அரசு கொடுத்த காலக்கெடுவுக்குள் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ஒருநபர் ஆணைய வக்கீல் அருள் வடிவேல் சேகர் தெரிவித்தார்.;
தூத்துக்குடி:
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான விசாரணையை அரசு கொடுத்த காலக்கெடுவுக்குள் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ஒருநபர் ஆணைய வக்கீல் அருள் வடிவேல் சேகர் தெரிவித்தார்.
துப்பாக்கி சூடு சம்பவம்
தூத்துக்குடியில் கடந்த 22-5-2018 அன்று நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். இச்சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
ஏற்கனவே நடந்த 32 கட்ட விசாரணையில் 1,016 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 1,342 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டு உள்ளன. தற்போது 33-வது கட்ட விசாரணை, தூத்துக்குடி பீச் ரோடு விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் கடந்த 13-ந்தேதி தொடங்கியது. இதில் துப்பாக்கி சூடு சம்பவத்தின்போது பணியில் இருந்த மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் 18 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. நேற்று முன்தினம் தூத்துக்குடி மாவட்ட முன்னாள் கலெக்டரும், தமிழக சுற்றுலாத்துறை இயக்குனருமான சந்தீப் நந்தூரி உள்பட 4 பேர் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆஜர்
நேற்று 6-வது நாளாக விசாரணை நடந்தது. இதில் 4 பேர் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்த விசாரணையில் நெல்லை மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் மட்டும் ஆஜாரானார். மற்ற 3 பேரும் அடுத்தகட்ட விசாரணையில் ஆஜராகுவதாக தெரிவித்துள்ளனர்.
ஒருநபர் ஆணையத்தின் 33-வது அமர்வின் முதல்கட்ட விசாரணை நேற்றுடன் நிறைவடைந்தது.
தொடர்ந்து ஒரு நபர் ஆணைய வக்கீல் அருள் வடிவேல் சேகர் நிருபர்களிடம் கூறியதாவது:-
காலக்கெடுவுக்குள் விசாரணையை முடிக்க...
விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்ட 18 உயர் அதிகாரிகளில் 15 பேர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். இதில் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி, ஒரு போலீஸ் ஐ.ஜி. மற்றும் 8 போலீஸ் சூப்பிரண்டுகள் அடங்குவர். 33-வது கட்ட விசாரணையுடன் சேர்த்து மொத்தம் 1,410 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதில் 1,031 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, 1,346 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளது.
33-வது அமர்வின் 2-ம் கட்ட விசாரணை வருகிற 27-ந்தேதி தொடங்கி 30-ந் தேதி வரை நடைபெறும். இதில் சம்மன் அனுப்பப்பட்டு ஆஜராகாதவர்கள் ஆணையத்தின் முன்பு விளக்கமளிப்பார்கள். நடிகர் ரஜினிகாந்த் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து குறிப்பிட்டு சில விஷயங்களை கூறியதனால் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். முன்னாள் முதல்-அமைச்சர் மற்றும் ஏற்கனவே ஆஜராகி விளக்கமளித்தவர்கள் தேவையென்றால் மட்டுமே விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள். அரசு கொடுத்த காலக்கெடுவுக்குள் ஆணையத்தின் விசாரணையை முடிப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட நீதிபதிகள் பாண்டுரங்கன், உதயன், தலைமை செயலக அலுவலர் அமுதா ஆகியோர் உடன் இருந்தனர்.