டிராக்டர் மோதி தொழிலாளி சாவு
மோட்டார்சைக்கிள் மீது டிராக்டர் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
தேவாரம்:
தேவாரம் மல்லிங்கர் கோவில் தெருவை சேர்ந்தவர் அலெக்சாண்டர் (வயது37), கூலித்தொழிலாளி. இவரது தந்தை மூக்கையா தே.மேட்டுப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் இரவு காவலராக வேலை செய்கிறார். அலெக்சாண்டர் தினமும் தந்தைக்கு, மோட்டார் சைக்கிளில் சாப்பாடு கொண்டு செல்வது வழக்கம். நேற்று முன்தினம் இரவு அலெக்சாண்டர், மோட்டார் சைக்கிளில் தே.மேட்டுப்பட்டி சென்று தந்தைக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு, மீண்டும் தேவாரத்திற்கு வந்து கொண்டு இருந்தார். அப்போது பத்திரபதிவு அலுவலகம் சாலை அருகே வந்தபோது, எதிரே வந்த டிராக்டர், மோட்டார்சைக்கிள் மீது பலமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அலெக்சாண்டர் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேவாரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரை மீட்டு, சிகிச்சைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து தேவாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.