உயிர் பலி வாங்க காத்திருக்கும் பள்ளி சுற்றுச்சுவர்

நாகையில் உயிர் பலி வாங்க காத்திருக்கும் பள்ளி சுற்றுச்சுவரை இடித்து அகற்ற வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.;

Update: 2021-12-18 14:18 GMT
வெளிப்பாளையம்:
நாகையில் உயிர் பலி வாங்க காத்திருக்கும் பள்ளி சுற்றுச்சுவரை இடித்து அகற்ற வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.
நகராட்சி நடுநிலைப்பள்ளி
நாகை வெளிப்பாளையம் நெல்லுக்கடை தெருவில் ஏழை எளிய மாணவ, மாணவிகள் கல்வி பெற "தர்மசாலா" என்ற பெயரில் ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் பள்ளி தொடங்கப்பட்டது. பின்னர் இந்த பள்ளி நகராட்சி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு நகராட்சி நடுநிலைப்பள்ளியாக செயல்பட்டு வருகிறது.
 இந்த பள்ளியில் எல்.கே.ஜி முதல் 8-ம் வகுப்பு வரை 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு பகுதிநேர ஆசிரியர் உள்பட 13 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும் பொதுமக்களின் நலனுக்காக போலியோ சொட்டு மருந்து, கொரோனா தடுப்பூசி முகாம் மற்றும் தேர்தல் வாக்குச்சாவடி மையமாகவும் செயல்படுகிறது.
சேதமடைந்த சுற்றுச்சுவர்
வடகிழக்கு பருவமழை உள்ளிட்ட இயற்கை பேரிடர் காலத்தில் அண்ணாநகர், தியாகராஜபுரம், தாமரைக்குளம் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு தற்காலிக முகாமாகவும் செயல்படுகிறது. 
இந்த நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள அங்கன்வாடி கட்டிடம் மற்றும் சமையல் கூடம் மிகவும் பழுதடைந்து ஆபத்தான நிலையில்  நிலையில் உள்ளது. இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அங்கன்வாடி மையம் இடமாற்றம் செய்யப்பட்டது. ஆனால் பழுதடைந்த சமையல் கூடம் இடிக்கப்படாமல் அப்படியே உள்ளது.
 அகற்ற வேண்டும்
இதேபோல இந்த பள்ளியின் சுற்றுச்சுவர் சேதமடைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று சுற்றுச்சுவர் சேதமடைந்து சாய்ந்திருந்ததை கவனித்த ஆசிரியர்கள் மரக்கட்டையை சுவரில் முட்டுகொடுத்து வைத்துள்ளனர். இந்த சுற்றுச்சுவர் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் உயிர் பலி வாங்க காத்திருக்கிறது என அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.
எனவே திருநெல்வேலியில் கடபள்ளி கழிவறை இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் போல் நடைபெறாமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆபத்தான நிலையில் உள்ள சுற்றுச்சுவர் மற்றும் சமையல் கூடத்தை இடித்து அகற்றி விட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்