ஏல சீட்டு நடத்தி கோடிக்கணக்கில் பண மோசடி
குன்னூரில் ஏல சீட்டு நடத்தி கோடிக்கணக்கில் பண மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட மக்கள் போலீசில் புகார் அளித்து உள்ளனர்.
ஊட்டி
குன்னூரில் ஏல சீட்டு நடத்தி கோடிக்கணக்கில் பண மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட மக்கள் போலீசில் புகார் அளித்து உள்ளனர்.
போலீஸ் நிலையம் முற்றுகை
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள ஓட்டுபட்டரை, வள்ளுவர் நகர், வாசுகி நகர் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடம் ஏல சீட்டு நடத்தி பண மோசடி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக புகார் அளிக்க பாதிக்கப்பட்ட பொதுமக்கள், குன்னூர் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். மேலும் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் போலீசில் அளித்த புகார் மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
ரூ.1 கோடிக்கு மேல்...
ஓட்டுபட்டரை பகுதியில் வசித்து வந்த அப்பாஸ்(வயது 45) என்பவர் ஏல சீட்டு நடத்தி வந்தார். அவரிடம், கடந்த சில ஆண்டுகளாக மாதந்தோறும் மக்கள் பணம் செலுத்தி வந்தனர். ஆனால் சீட்டு முடிந்தும் மக்களுக்கு வழங்க வேண்டிய பணத்தை கொடுக்கவில்லை. தற்போது திடீரென அவர் குடும்பத்தினரோடு தலைமறைவாகி விட்டார்.
ரூ.1 கோடிக்கு மேல் பணம் வசூலித்து ஏமாற்றி உள்ளார். எனேவ அவர் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை பெற்று தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இந்த மனுவின் நகல் போலீஸ் சூப்பிரண்டிடம் அளிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.