18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 2-வது டோஸ் தடுப்பூசி

நீலகிரி மாவட்டத்தில் இந்த மாதத்துக்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினார்கள்.

Update: 2021-12-18 13:41 GMT
ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் இந்த மாதத்துக்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினார்கள்.

சிறப்பு முகாம்

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக 15-ம் கட்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் என 258 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. 

விவரங்கள் பதிவு

இந்த மையங்களில் தடுப்பூசி செலுத்த வந்தவர்களின் ஆதார் எண், செல்போன் எண் போன்ற விவரங்கள் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டது. மேலும் தடுப்பூசி செலுத்த வரும் நபர்களை அழைத்து வர தலா 2 அங்கன்வாடி பணியாளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். மையங்களில் இருந்து தொலைவில் வசிப்பவர்களுக்கு தடுப்பூசி செலுத்தவும், 

வனப்பகுதிகளை ஒட்டி முகாம்களை நடத்தவும் 20 நடமாடும் முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 2-வது டோஸ் செலுத்த குறிப்பிட்ட நாட்கள் நிறைவடைந்தும் செலுத்தாதவர்களை செல்போனில் தொடர்பு கொண்டு சுகாதாரத்துறையினர் தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தி வருகின்றனர். 

சுற்றுலா தலங்கள்

மேலும் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் வெளிமாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து வருகை தந்த சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவர்கள் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். நகராட்சி பணியாளர்கள் வீடு, வீடாக சென்று தடுப்பூசி செலுத்தாத நபர்களை கண்டறிந்து மையங்களுக்கு அழைத்து வந்தனர்.

அனைவருக்கும் 2-வது டோஸ்

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, நீலகிரியில் தகுதி வாய்ந்த அனைவருக்கும் முதல் டோஸ் செலுத்தப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் இந்த மாதத்துக்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும். 

இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 9 லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. தடுப்பூசி செலுத்தாதவர்கள் செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்