நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நின்ற பிறகும் 42 நாட்களாக முழு கொள்ளளவில் நீடிக்கும் வைகை அணை நீர்மட்டம்
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நின்ற பிறகும் வைகை அணை நீர்மட்டம் தொடர்ந்து 42 நாட்களாக முழு கொள்ளளவில் நீடித்து வருகிறது.
ஆண்டிப்பட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. வடகிழக்கு பருவமழையின் காரணமாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன்காரணமாக வைகை அணை நீர்மட்டம் கடந்த மாதம் 7-ந்தேதி முழுக்கொள்ளளவான 70 அடியை எட்டியது..
இதனிடையே நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வது நின்றுவிட்டது. எனினும் அன்று முதல் நேற்று வரை தொடர்ந்து 42 நாட்கள் வைகை அணை நீர்மட்டம் முழு கொள்ளளவிலேயே நீடிக்கிறது.
விவசாயிகள் மகிழ்ச்சி
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வைகை அணைக்கு வினாடிக்கு 1,101 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே பாசன கால்வாய்கள் வழியாக உபரியாக திறக்கப்பட்டு வருகிறது. வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து முழு கொள்ளளவில் நீடிப்பதால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நேற்று காலை 6 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 70.21 அடியாக இருந்தது.