கஞ்சா விற்பனை குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.10 ஆயிரம் சன்மானம் - மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தகவல்

கஞ்சா விற்பனை குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.10 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2021-12-18 07:03 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டத்தில் சமீப காலமாக கஞ்சா போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் இளம் தலைமுறையினர் மத்தியில் அதிகரித்து வருவதாலும், குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் எதிர்காலம் கருதி கஞ்சா புழக்கத்தை வேரோடு ஒழிக்க கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதை தடுக்கும் வண்ணம் ரகசிய தகவலின் அடிப்படையில் கடந்த 6 மாதத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 166 நபர்கள் மீது 89 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சுமார் ரூ.16 லட்சத்து 59 ஆயிரத்து 400 மதிப்புள்ள 171 கிலோ கஞ்சா பொருட்களும், 12 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

மேலும் 25 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா புழக்கத்தை ஒழிக்க முழுவீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் கஞ்சா விற்பனை மற்றும் கஞ்சா கடத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவது பற்றி தெரிந்தால் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு 6379904848 என்ற தொலைபேசி எண்ணில் நேரடியாகவோ, வாட்ஸ்-அப் மூலமாகவோ தகவல் தெரிவிக்குமாறு மாவட்ட காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது. தகவல் தெரிவிப்பவர்களின் விபரம் ரகசியமாக வைக்கப்படும். மேலும், தகவல் தருபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் வரை சன்மானம் வழங்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் வி.வருண்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்