‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தேங்கிய குப்பைகள் உடனடி அகற்றம்
சென்னை புரசைவாக்கம் திருமலையப்பன் தெருவில் நீண்டகாலமாக பூட்டப்பட்டுள்ள ஒரு வீட்டின் முன்பு தொடர்ச்சியாக குப்பைகள் கொட்டப்பட்டு வரும் செய்தி, ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதன் எதிரொலியாக அந்த குப்பைகளை அகற்றி மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். மாநகராட்சிக்கும், ‘தினத்தந்தி’ க்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
மின்கம்பம் மோசம்
சென்னை அம்பத்தூர் விநாயகபுரம் திரு.வி.க.நகரில் உள்ள மின்கம்பம் மிக மோசமான நிலையில் உள்ளது. எப்போது கீழே விழுமோ? என்ற அச்சத்துடன் இந்த வழியை கடக்கிறோம். எனவே இந்த மின்கம்பத்தை மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக மாற்றி தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பொதுமக்கள்.
கொசுத்தொல்லையால் அவதி
சென்னை புரசைவாக்கம் வடமலை தெருவில் கொசுத்தொல்லை அதிகமாக இருக்கிறது. இதனால் இரவில் தூக்கம் கெடுகிறது. டெங்கு காய்ச்சல் வந்துவிடுமோ? என்ற அச்சம் உள்ளது. எனவே இந்த பகுதியில் தினமும் கொசு மருந்து அடிக்க வேண்டும். கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.
- தனலட்சுமி, வடமலை தெரு.
நிர்வாணமாக சுற்றும் நபர்
சென்னை கொரட்டூர் பாலாஜிநகர் மற்றும் சுபலட்சுமிநகர் பகுதிகளில் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் நிர்வாணமாக சுற்றிக்கொண்டு இருக்கிறார். இதனால் அப்பகுதியில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் சங்கடத்துக்கும், பயத்துக்கும் ஆளாகுகிறார்கள். எனவே ஆறுதல் இன்றி சுற்றி திரியும் அவரை மீட்டு மனநல காப்பகத்தில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?
- எம்.கிருஷ்ணன், கொரட்டூர்.
வடிகால்வாய் வசதி இல்லை
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் பெரிய ஒபுளாபுரம் ஊராட்சிக்குட்பட்ட நாகராஜ கண்டிகை கிராமத்தில் முறையான வடிகால்வாய் வசதி அமைத்து தரப்படவே இல்லை. இதனால் பெருமழை ஓய்ந்த பின்னரும் எங்கள் கிராமத்தில் தேங்கிய மழைநீர் இன்னும் வடியாமலேயே இருக்கிறது. பஞ்சாயத்து நிர்வாகிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. மக்கள் நலன் காக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமா?
- சமூக ஆர்வலர்கள்.
பல்லாங்குழியான சாலையால் அவதி
சென்னை பெரம்பூர் முத்துகுமாரசாமி சாலை பல ஆண்டுகளாகவே குண்டும் குழியுமாக உள்ளது. பல்லாங்குழியாக காட்சி தரும் இச்சாலையில் மிகுந்த சிரமத்துக்கு இடையே பயணிக்கும் நிலை உள்ளது. வாகனங்கள் அடிக்கடி பழுதாகும் நிலை இருக்கிறது. எனவே வாகன ஓட்டிகள் படும் சிரமத்தை உணர்ந்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சாலைக்கு எப்போது விடிவு காலம் பிறக்கும்?
- எஸ்.வில்சன், பெரம்பூர்.
காலி இடத்தில் சமூக விரோத செயல்கள்
சென்னை திருவல்லிக்கேணி ஜாம்பஜார் மார்க்கெட் பின்புறம் உள்ள புலிபோன்பஜார் 3-வது சந்தில் கோவிலுக்கு சொந்தமான காலி இடம் உள்ளது. இதில் சமூக விரோதிகள் புகுந்து மது குடிப்பதும், கஞ்சா போன்ற போதை வஸ்துகளை பயன்படுத்தியும் வருகிறார்கள். இதை அவர்கள் வழக்கமாகவே வைத்திருக்கிறார்கள். இதனால் இந்த வழியை பெண்கள் ஒருவித தயக்கத்துடன் கடந்து செல்லும் நிலை உள்ளது.
- சமூக ஆர்வலர்கள்.
காட்சி பொருளான குடிநீர் தொட்டி
செங்கல்பட்டு மாவட்டம் நத்திவரம் காலனி 7-வது வார்டு அங்கன்வாடி மையம் அருகே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் கடந்த ஆண்டு ஜனவரி 28-ந்தேதி திறக்கப்பட்டது. சிறிது நாட்கள் தண்ணீர் வந்தது. அதன்பின்னர் தண்ணீர் வராமல் இந்த தொட்டி (சென்டக்ஸ்) காட்சி பொருளாக இருக்கிறது. இதனால் இந்த திறப்பு விழா கல்வெட்டில் தண்ணீர் இல்லை என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது.
- ஜெயவேலு, நந்திவரம்.
நாய்கள் தரும் அச்சம்
சென்னை அடையாறு சாஸ்திரிநகர் முதல் அவென்யூ 1-வது குறுக்குத்தெருவில் நாய்கள் தொல்லை மிகுதியாகவே இருக்கிறது. சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை விரட்டி துரத்துகிறது. அந்த வழியாக செல்லவே பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். இந்த நாய்கள் தொல்லையில் இருந்து மக்களை காக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?
- சத்தியநாராயணன், அடையாறு.
தீராத பிரச்சினை எப்போது தீரும்?
திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் புள்ளிலைன் ஊராட்சி 5-வது வார்டு லட்சுமி அம்மன் தெருவில் 12 ஆண்டுகளுக்கு முன்பு சாலை அமைக்கப்பட்டது. தற்போது இந்த சாலை மிக மோசமான நிலையில் இருக்கிறது. சாக்கடை அடைப்பு பிரச்சினையும் தீராத பிரச்சினையும் உள்ளது. எங்கள் தெருவில் உள்ள நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம்.
- பொதுமக்கள்.
உடைந்த கால்வாய்... சேதமான சாலை...
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேரூராட்சி 9-வது வார்டுக்குட்பட்ட கரிகார தெருவில் கழிவுநீர் கால்வாய் உடைந்துள்ளது. சாலையும் சேதம் அடைந்திருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைகிறார்கள். விளையாடும் குழந்தைகளும் கீழே விழுந்து அடிபடுகிறார்கள். இந்த நிலைமை தான் பல காலமாக இங்கே நிலவி வருகிறது. எனவே மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் இந்த பிரச்சினை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
- சிவா, கரிகார தெரு.