ஐ.டி.ஐ.யில் படிக்கும்போதே கர்ப்பம்: வீட்டு மாடியில் இருந்து குதித்த மாணவி, சிகிச்சை பலனின்றி சாவு
ஐ.டி.ஐ.யில் படிக்கும்போதே காதலனால் கர்ப்பமானதால் வீட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற மாணவி, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பூந்தமல்லி,
சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சினிமா தொழிலாளி ஒருவரின் 20 வயதான மகள், கிண்டியில் உள்ள ஐ.டி.ஐ.யில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். அவர், செங்கல்பட்டை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்தார். இருவரும் நெருங்கி பழகியதால் மாணவி கர்ப்பமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, பெற்றோருக்கு தெரியாமல் மறைத்துவிட்டார். தொடர்ந்து ஐ.டி.ஐ. சென்று வந்தார்.
தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருந்த மாணவிக்கு கடந்த 13-ந்தேதி கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் மாடியில் சிறிதுநேரம் நடைபயிற்சி சென்றுவருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்ற மாணவி, மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். அந்த அதிர்ச்சியில் மாணவிக்கு அங்கேயே பிரசவம் ஏற்பட்டு, இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்தது.
படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய மாணவியை மீட்டு கோடம்பாக்கம் மகப்பேறு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மருத்துவ பரிசோதனையில் அவர் 8 மாத கர்ப்பிணியாக இருந்ததும், மாடியில் இருந்து குதித்த அதிர்ச்சியில் அவருக்கு குழந்தை இறந்து பிறந்ததும் தெரிந்தது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த மாணவி, நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து, காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு காதலன் திருமணத்துக்கு மறுத்ததால் ஏற்பட்ட விரக்தியில் மாணவி தற்கொலை செய்தாரா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.