உத்தனப்பள்ளி அருகே வடமாநில தொழிலாளி குத்திக் கொலை நண்பர் கைது
உத்தனப்பள்ளி அருகே வடமாநில ெதாழிலாளி குத்திக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய நண்பரை போலீசார் கைது செய்தனர்.
ராயக்கோட்டை:
உத்தனப்பள்ளி அருகே வடமாநில ெதாழிலாளி குத்திக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய நண்பரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தொழிலாளி
மேற்கு வங்காள மாநிலம் ஜால்பைகுரி பகுதியை சேர்ந்தவர் சம்புதந்தி (வயது 37). அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் சிவநாத் (21). தொழிலாளர்களான இவர்கள் 2 பேரும் கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே பாத்தகோட்டா பகுதியில் தனியார் கல்குவாரியில் வேலை செய்து வந்தனர். நண்பர்களான இவர்கள் 2 பேரும், அங்கேயே தங்கி இருந்தனர்.
இதில் சிவநாத்துக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு சம்புதந்தி சமையல் செய்து சாப்பிட்டு கொண்டு இருந்துள்ளார். அப்போது மதுபோதையில் தள்ளாடியபடி வந்த சிவநாத், சம்புதந்தி சாப்பிடும் தட்டில் கால் வைத்து தகாத வார்த்தையால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.
குத்திக்கொலை
இதனால் ஆத்திரம் அடைந்த சம்புதந்தி அங்கு கிடந்த காய்கறி வெட்ட பயன்படுத்தும் கத்தியை எடுத்து சிவநாத்தை குத்தியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த சிவநாத் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து உத்தனப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட சிவநாத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு அஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்புதந்தியை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.