காதலுக்கு உடந்தையாக இருந்ததாக வாலிபரை வீடு புகுந்து அடித்து இழுத்துச் சென்ற பெண்ணின் உறவினர்கள்
காதலுக்கு உடந்தையாக இருந்ததாக வாலிபரை வீடு புகுந்து அடித்து பெண்ணின் உறவினர்கள் இழுத்து சென்றனர்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நத்தக்குழி கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர், பெரியாகுறிச்சி கோனார் தெருவை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் இருவரும் கடந்த வாரம் தலைமறைவாகி விட்டனர். இதற்கிடையே சோழன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ், அந்த வாலிபரிடம் டிராக்டர் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். மேலும் இவர் நத்தக்குழி கிராமத்தில் உள்ள தனது மாமா மோகன் வீட்டில் தங்கியுள்ளார். இந்நிலையில் அந்த வாலிபர், பெண்ணை கடத்தி சென்றதாகவும், அதற்கு உடந்தையாக ராஜேஷ் இருந்ததாகவும் கருதி பெண்ணின் உறவினர்கள் மற்றும் அவர்களது நண்பர்கள் 5 பேர் தங்களது மோட்டார் சைக்கிள்களில் மோகன் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு வீடு புகுந்து ராஜேசை பிடித்து சரமாரியாக தாக்கி தரதரவென இழுத்து வந்து தங்களது மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றனர். இதனை தடுக்க முயன்ற மோகனின் மனைவி ரமாவதியையும் தாக்கி உள்ளனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தை அருகில் வசிக்கும் வீட்டை சேர்ந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்து உள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த ராஜேசின் உறவினர்கள், ஒரு மோட்டார் கொட்டகையில் கட்டிப்போடப்பட்டிருந்த ராஜேசை மீட்டனர். பின்னர் அவரையும், ரமாவதியையும் செந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து ராஜேஷ் கொடுத்த புகாரின்பேரில் பாலுச்சாமி மகன் மணிவண்ணன், ராஜேந்திரன் மகன் ரஞ்சித், ரஞ்சித்தின் மாமா கொளஞ்சி, நத்தக்குழி கிராமத்தை சேர்ந்த மணிவேல் மகன் மணிமாறன், பெண்ணின் அண்ணன் அஜித் ஆகிய 5 பேர் மீது செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்நிலையில் காதல் ஜோடி அரியலூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். வாலிபரை பட்டப்பகலில் வீடு புகுந்து அடித்து இழுத்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.