தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அரியலூர்:
மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி அரியலூர் அண்ணா சிலை அருகில் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தமிழக அரசை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன் தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். முன்னாள் எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின்போது, தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், அம்மா உணவகம், மருந்தகம் ஆகியவைகளை பெயர் மாற்றம் செய்யக்கூடாது, ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் மாவட்ட, ஒன்றிய, பேரூராட்சி, நகர மற்றும் கிளை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.