புஞ்சைபுளியம்பட்டியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகளிடம் வியாபாரிகள் வாக்குவாதம்
புஞ்சைபுளியம்பட்டியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகளிடம் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டி தினசரி காய்கறி சந்தை பஸ் நிலையம் பின்புறம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள காலியிடத்தில் வியாபாரிகள் சிலர் ஆக்கிரமிப்பு செய்து கொட்டகை அமைத்து வியாபாரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நகராட்சி அனுமதியின்றி வைத்திருந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவதற்காக நேற்று காலை நகராட்சி ஆணையாளர் சக்திவேல், சத்தியமங்கலம் போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபால் மற்றும் நகராட்சி பணியாளர்கள் சென்றார்கள். அப்போது புஞ்சைபுளியம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுசாமி, நிலவருவாய் ஆய்வாளர் யோகநரசிம்மன் மற்றும் 30-க்கும் மேற்பட்ட போலீசார் உடன் சென்றார்கள்.
அப்போது பவானிசாகர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. பி.எல்.சுந்தரம் தலைமையில் வியாபாரிகள் தினசரி காய்கறி சந்தையின் கதவு வாயிலில் நின்றுகொண்டு, ஆக்கிரமிப்பு அகற்றுவது பற்றி நகராட்சி நிர்வாகம் உரிய அறிவிப்பு தரவில்லை. பேச்சுவார்த்தை நடத்தியபின் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். இதனால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெறவில்லை. அதன்பின்னர் நகராட்சி அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன் முடிவில் ஆக்கிரமிப்பு கடைகளுக்கு நகராட்சி நிர்வாகம் மாற்று இடம் அளித்தால் கடையை காலி செய்வதாக வியாபாரிகள் தெரிவித்துவிட்டு கலைந்து சென்றார்கள்.