போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய வாலிபர்

போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய வாலிபர் பிடிபட்டார்

Update: 2021-12-17 21:12 GMT
முசிறி
திருச்சி மாவட்டம், முசிறி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்தையன் தலைமையில் காவிரி பெரியார் பாலத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி போலீசார் சோதனை செய்தபோது, அவரிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்ததாக தெரிகிறது. 
இதையடுத்து அந்த வாலிபரை முசிறி போலீஸ் நிலையம் அழைத்து வந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் நாமக்கல் பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் (வயது 19) என்பதும், முசிறி பகுதியில் கஞ்சா சப்ளை செய்ய வந்ததும் தெரியவந்தது.
தப்பி ஓட்டம்
 இதையடுத்து போலீசார் தினேஷ்குமாரை கைது செய்து போலீஸ் நிலைய வளாகத்தின் உள்ளே அமர வைத்திருந்தனர். அப்போது அந்த வாலிபர் போலீஸ் நிலையத்தில் இருந்து கண் இமைக்கும் நேரத்தில் தப்பி ஓடி தலைமறைவானார். இதனால், அதிர்ச்சி அடைந்த போலீசார் முசிறி பகுதியில் பல்வேறு இடங்களில் தினேஷ்குமாரை தீவிரமாக தேடினர். இந்த நிலையில் முசிறி அருகே உள்ள அந்தரபட்டி பகுதியில் அந்த வாலிபர் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று தினேஷ்குமாரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய வாலிபரை அரைமணி நேரத்திற்குள் போலீசார் பிடித்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்