தஞ்சையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் மீதான வரியை தி.மு.க. அரசு குறைக்க வலியுறுத்தி தஞ்சையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-12-17 20:06 GMT
தஞ்சாவூர்:
பெட்ரோல், டீசல் மீதான வரியை தி.மு.க. அரசு குறைக்க வலியுறுத்தி தஞ்சையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
தஞ்சை தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தஞ்சை ரெயிலடியில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளரும், தஞ்சை மாவட்ட செயலாளருமான ஆர்.வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
மாவட்ட அவைத்தலைவர்கள் திருஞானசம்பந்தம்(தஞ்சை தெற்கு), சுப்பிரமணியம்(தஞ்சை வடக்கு), முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சேகர், கோவிந்தராசு, ராமச்சந்திரன், ரத்தினசாமி, ராஜேந்திரன், ராம.ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோரிக்கைகள்
ஆர்ப்பாட்டத்தில், மக்கள் நலன் காக்கும் திட்டங்களை தி.மு.க. அரசு செயல்படுத்த வேண்டும். பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரிகளை உடனடியாக குறைக்க வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு உதவி வழங்க வேண்டும். வெள்ளத்தால் பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு போதுமான இழப்பீடு வழங்க வேண்டும்.
பொங்கல் பண்டிகையை கொண்டாட உதவும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகை வழங்க வேண்டும். அம்மா மினி கிளினிக்குகளை தமிழக அரசு மூடுவதை கைவிட வேண்டும். கடுமையாக உயர்ந்துள்ள அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
கோஷங்கள்
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.பி. பாரதிமோகன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராம்குமார், இளமதி சுப்பிரமணியன், தவமணி, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், மாவட்ட பால்வள தலைவர் காந்தி, மாவட்ட மகளிரணி செயலாளர் அமுதா ரவிச்சந்திரன், முன்னாள் மேயர் சாவித்திரி கோபால், கும்பகோணம் நகராட்சி முன்னாள் தலைவர் ரத்னா சேகர், ஒன்றிய செயலாளர்கள் துரை.வீரணன், கோபிநாதன், பகுதி செயலாளர்கள் அறிவுடைநம்பி, புண்ணியமூர்த்தி, சரவணன், ரமேஷ், முன்னாள் தொகுதி துணைச் செயலாளர் பாலை.ரவி, மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் நாகராஜன் மற்றும் தஞ்சை தெற்கு, வடக்கு மாவட்ட ஒன்றிய செயலாளர்கள், பகுதி செயலாளர்கள், அனைத்துப்பிரிவு நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மக்கள் பிரச்சினையில் கவனம் செலுத்தாத தி.மு.க. அரசை கண்டித்தும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்