3-வது நாளாக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் கிராம மக்கள் போராட்டம்

3-வது நாளாக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் கிராம மக்கள் போராட்டம்

Update: 2021-12-17 19:52 GMT
ஏற்காடு அருகே கட்டிடத்தை சீரமைக்க கோரி

ஏற்காடு, டிச.18-
ஏற்காடு அருகே பள்ளி கட்டிடத்தை சீரமைக்க கோரி 3-வது நாளாக குழந்தைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பாமல் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு தொடக்கப்பள்ளி
ஏற்காட்டில் இருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமம் புலியூர். இந்த கிராமத்தில் இயங்கி வரும் அரசு தொடக்கப்பள்ளியில் 105 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த பள்ளி கட்டிடம் கட்டி பல ஆண்டுகள் ஆனதால் சேதம் அடைந்து காணப்படுகிறது. மேலும் மழைக்காலங்களில் வகுப்பறைகளில் மழைநீர் ஒழுகுகிறது. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் சிரமப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் பள்ளி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என்று கிராம மக்கள்  தாசில்தார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது.
பள்ளிக்கு அனுப்பவில்லை
இதைத்தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளி கட்டிடத்தை சீரமைக்க கோரி கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். மேலும் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்றும் தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி, வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்முருகன், தாசில்தார் ரவிக்குமார் உள்பட அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்ைத நடத்தினர். அப்போது பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். எனினும் கடந்த  2 நாட்களாக கிராம மக்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை.
வெறிச்சோடியது
இதனிடையே நேற்று 3-வது நாளாக கிராம மக்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் புலியூர் தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், புலியூர் தொடக்கப்பள்ளி கட்டிடம் பழுதடைந்து காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் குழந்தைகளுக்கு பள்ளிக்கு அனுப்ப அச்சமாக உள்ளது. கட்டிடத்தை சீரமைத்தால் தான் பள்ளிக்கு அனுப்புவோம். நேற்று நெல்லையில் கூட பள்ளி கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியானார்கள். அது போன்ற சம்பவம் இங்கு நடந்து விடாமல் இருக்க பள்ளி கட்டிடத்தை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்